முடக்கப்பட்ட சிம்பு, நயன்தாரா சமூகவலைதளப் பக்கங்கள்; சந்தேகம் கிளப்பும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிம்பு மற்றும் நயன்தாரா இருவரின் சமூகவலைதளப் பக்கங்கள் முடக்கப்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிரபலங்களின் சமூகவலைதளப் பக்கங்கள் இதுபோன்று முடக்கப்படுவது வழக்கமாக நடக்கும் விஷயம்தான். இவ்வாறு முடக்கப்படும் பக்கத்தில் இருந்து பணம் கேட்பது, ஆபாசமான புகைப்படங்களை வெளியிடுவது, தவறான குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற விஷயங்கள் நடைபெறும். இதில் சிம்பு, நயன்தாராவின் சமூகவலைதளப் பக்கங்கள் இன்று சிக்கி இருக்கிறது. சிம்புவின் எக்ஸ் பக்கத்தில் இருந்தும் சம்பந்தமே இல்லாத சில ட்வீட்கள் போடப்பட்டிருந்தது.
அதேபோல, நயன்தாராவின் எக்ஸ் தள அக்கவுண்ட்டும் முடக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து எச்சரிக்கும் விதமாக நயன்தாரா தன்னுடைய சமூகவலைதள கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும் அதனால், தவறான குறுஞ்செய்திகள் எதுவும் வந்தால் பதிலளிக்க வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார்.
சமூகவலைதளங்களில் பெரிதாக ஆக்டிவாக இல்லாமல் இருந்தவர் நயன்தாரா. ‘ஜவான்’ படத்தின் புரோமோஷனுக்காக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியவர் மற்ற சமூகவலைதளங்களிலும் ஆக்டிவாகத் தொடங்கினார். இப்போது, சிம்பு-நயன்தாரா இருவரது கணக்குகளும் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் ’பழைய விஷயங்களை கிளறுவதற்காகவா’ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.