''அம்மா ஸ்ரீதேவிக்கு கொடுத்த அன்பு எனக்கும் வேண்டும்'' - தமிழில் ஜான்வி கபூர் உருக்கம்!
தமிழ் சினிமாவில் எண்பது மற்றும் தொண்ணூறுகளில் கொடிக்கட்டிப் பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கதாநாயகியாக மாறினார். ரஜினி, கமல் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர். பின்னர் பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்தார். இவருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே அம்மாவைப் போலவே சினிமாவில் நடிகையாக வலம் வருகின்றனர்.
இதில் நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் சில படங்கள் நடித்திருக்கிறார். தற்போது, ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் இந்த மாதம் 27-ம் தேதி வெளியாக இருக்கும் ‘தேவரா’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி என பான் இந்திய படமாக இது வெளியாகிறது.
படத்தில் இருந்து வெளியான ‘பத்தவைக்கும்’, ‘டாவுடி’ ஆகிய பாடல்களில் கவர்ச்சியிலும் நடனத்திலும் அசத்தி இருந்தார் ஜான்வி. இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடந்தது. இதில் தமிழில் பேசி அசத்தினார் ஜான்வி. ''சென்னை எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். சென்னை என்றாலே அம்மாவுடன் இருந்த பல நியாபகங்கள் வரும். அம்மாவுக்கு ரசிகர்கள் நீங்கள் கொடுத்த அன்பை எனக்கும் தருவீர்கள் என நம்புகிறேன். அந்த அளவுக்கு கடினமான உழைப்பையும் சினிமாவில் கொடுப்பேன். ‘தேவரா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். உங்களுக்கும் படம் நிச்சயம் பிடிக்கும்” என்று பேசினார்.