ஜோதிகா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவும், ‘’உண்மையான சுதந்திரம்’’ பதிலடியும்!
2கே தொடக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். பின்னர் ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் வந்தவர் செகண்ட் இன்னிங்ஸில் இன்னும் அதிரடியாக அடித்து ஆடுகிறார். தற்போது ஃபிட்னஸ் ஆர்வலராகவும் வலம் வரும் ஜோதிகா, புதிய அனுபவங்களை ஆர்வமாக எதிர்கொள்கிறார், அதை வெளிப்படையாக சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்கிறார்.
குறிப்பாக, புதிய இடங்களுக்கு பயணம் செய்வதையும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதையும் வாழ்வியலின் வழக்கமாக்கி, அதை மற்ற பெண்களுக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பகிர்ந்து வருகிறார் ஜோதிகா. தற்போது மும்பையில் வசித்துவரும் ஜோதிகா, தனது உடற்பயிற்சி பயணத்தை, சாதாரணமான உடற்பயிற்சியாக இல்லாமல், உடல் ஆரோக்கியத்தையும், முதன்மையாக மனநலத்தையும் மாற்றியமைக்கு ஒரு பயணமாக மாற்றி வருகிறார்.
நேற்று இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜோதிகா தனது வொர்க் அவுட் வீடியோவுடன் ஒரு கேப்ஷனையும் பகிர்ந்து கொண்டார். "இந்த சுதந்திர தினத்தில் உண்மையான சுதந்திரம் பெறுவோம்" எனும் அந்த கேப்ஷன்தான் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு தனியார் விருது விழாவில், ஜோதிகா அணிந்திருந்த உடை பேசுபொருளானது. இதனால், சூர்யா குடும்பத்தில் பெரியவர்கள் வருத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஜோதிகாவின் இந்த கேப்ஷன் உடை விமர்சனத்துக்கு பதிலாகப் பார்க்கப்படுகிறது.
ஜோதிகா தனது வலிமையான நிலைப்பாட்டையும், தனித்துவத்தையும், குறிப்பாக ஒரு பெண்ணாக தனது சுதந்திரத்தை, விருப்பங்களை வெளிப்படையாக முன்வைக்க வேண்டும் என்பதைக் காட்டும் விதமாக இந்த கேப்ஷனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.
உண்மையான சுதந்திரம் என்பது, மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அடிமையாகாமல், நம் வாழ்க்கையை நாமே தேர்ந்தெடுத்து, அதை நம் விருப்பப்படி நம்பிக்கையுடன் நகர்த்துவதைக் குறிக்கிறது. உண்மையான சுதந்திரத்தைப் புரிந்துகொள்வோம்!