இந்தி திணிப்பு எதிர்ப்பும், பெண்ணியமும்; கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ படம் எப்படி இருக்கிறது?!
வள்ளுவன்பேட்டை என்ற ஊரில் உள்ள மெட்ராஸ் செண்ட்ரல் பேங்க் என்ற வங்கியில் அப்பர் டிவிஷன் கிளர்க்காக வேலை பார்த்து கொண்டிருக்கிறார் கயல்விழி பாண்டியன் (கீர்த்தி சுரேஷ்). ஊருக்குள் இந்தி திணிப்பு எதிர்ப்பு, பெண்ணியம் என முற்போக்கு சிந்தனை உடையவராக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவருடைய தாத்தா எம்.எஸ். பாஸ்கருக்கு புற்றுநோய் என்று மருத்துவர்கள் சொல்ல அவருடைய கடைசி ஆசையை நிறைவேற்ற கல்யாணம் செய்ய முடிவெடுக்கிறார்.
தன்னைப் போலவே முற்போக்கு சிந்தனைகள் கொண்ட தமிழ் செல்வனை திருமணம் செய்ய முடிவெடுத்து அவரிடமும் தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கிறார். பின்பு, எதிர்பாராத ஒரு சமயத்தில் தமிழ் செல்வனின் உண்மையான முகம் தெரிய வர, கீர்த்தி சுரேஷின் கல்யாணம் என்ன ஆனது? இந்தி திணிப்பு எதிர்க்கும் அவரது கொள்கை என்ன ஆனது? என்பதாக விரிகிறது ‘ரகு தாத்தா’ படம்.
கதை முழுவதும் தன்னுடைய தோளில் இருக்கிறது என்ற பொறுப்பை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அவருக்கு ஜோடியாக வரும் ரவிந்திர விஜயும் ஆரம்பத்தில் நல்லவனாகவும் பின்பு கீர்த்தியிடம் சத்தமில்லாமல் வில்லத்தனம் காட்டுவதுமாக நடிப்பில் ரசிக்க வைக்கிறார். எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, கீர்த்தி சுரேஷின் அண்ணன், அண்ணியாக வரும் நடிகர்கள், தமிழ் தெரியாமல் தடுமாறும் பேங்க் மேனேஜர் என இவர்கள் கதாபாத்திரம் கதைக்கு கலகலப்பூட்டுகிறது. ஷான் ரோல்டனின் இசையும் கதைக்கு பலம் சேர்க்கிறது. பாடல்களும் ரசிக்கும் ரகம். படத்தில் கூடுமானவரைக்கும் தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி வசனம் அமைத்திருக்கிறார்கள். ’திணிப்புக்குதான் எதிர்ப்பு; வரதட்சணை கொடுக்க பெண்கள் என்ன ஆடா, மாடா?’ என்பது போன்ற வசனங்கள் கவனம் பெறுகிறது.
படத்தின் முதல் பாதியில் பெண்ணியம், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு என நகரும் கதைக்கான காட்சிகள் பெரிதாக அழுத்தம் இல்லாமல் கடக்கிறது. இரண்டாம் பாதியில் கதை வேறொரு பாதையில் பயணித்து கதையின் சாரத்தை மடை மாற்றுகிறது. தைரியமான பெண்ணாக வரும் கீர்த்தி, கல்யாணத்தை நிறுத்த ஏன் தடுமாறுகிறார்? இந்தி ஏன் கற்றுக்கொள்கிறார் எனப் பல கேள்விகளுக்கு சரியான விடை இல்லை. வன்முறை காட்சிகள் இல்லாதது, ஆபாச காட்சிகளோ வசனங்களோ இல்லாதது என குழந்தைகள், குடும்பம் என நிச்சயம் ஒருமுறை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் ‘ரகு தாத்தா’வை ரசிக்கலாம்.