விருப்பம் நிறைவேறியது; காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த மேகா ஆகாஷ்!
நடிகர் ரஜினியின் ‘பேட்ட’, நடிகர் தனுஷின் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மேகா ஆகாஷ். பின்பு, அவர் நடித்த சில படங்கள் தமிழ் சினிமாவில் பெரிதும் கைக்கொடுக்காமல் போகவே, தெலுங்கிலும் சில படங்கள் நடித்து வந்தார். இப்போது தனது நீண்ட நாள் காதலர் சாய் விஷ்ணுவுடன் நிச்சயதார்த்தம் முடித்திருக்கிறார்.
''எனது விருப்பம் நிறைவேறி விட்டது. என் வாழ்வின் காதலை கரம் பிடித்து விட்டேன். இனி உன்னோடுதான் அன்பும், காதலும், மகிழ்வும்'’ என்ற கேப்ஷனோடு தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். நேற்று கேரளாவில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாக இந்த நிகழ்வு முடிந்துள்ளது. மேகா ஆகாஷ் தெரிவித்துள்ள இந்த மகிழ்ச்சியான செய்திக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.