ஆடித் திருவிழாவில் மியா கலிஃபாவுக்கு பேனர் வைத்த ரசிகர்கள்... போலீஸார் அதிரடி!
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோயில் வளாகத்தில் ஸ்ரீ நாகாத்தம்மன் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் கோயிலுக்கு கிராம மக்கள் ஆடி மாத திருவிழா எடுத்து வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் நாளை ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு, நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் ஆலயத்தில் வளைகாப்பு வைபோக விழா நடைபெறுகிறது.
இதற்காக, அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் நூதன முறையில் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் ஆதார் கார்டு வடிவில் பேனர் வைத்தவர்களின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ‘எங்க பாசம் ஊரே பேசும்' என்ற வாசகங்களுடன் பேனர் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அம்மன் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கும் அதே வேளையில், நடிகை மியா காலிஃபா மஞ்சள் உடையில் பால்குடம் எடுத்துச் செல்லும் புகைப்படம் இடம்பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேனர் குறித்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆனதை தொடர்ந்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சர்ச்சைக்குரிய பேனரை அகற்றினர்.