''ராசி இல்லாதவன்னு சொல்லாதீங்க'' - பிரியா பவானி ஷங்கர்!
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் ’டிமாண்டி காலனி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்துக்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக உள்ளது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் ’இந்தியன் 2’ படத்தில் தனது கதாபாத்திரம் இணையத்தில் கேலி செய்யப்பட்டது தனக்கு மிகுந்த மனவருத்தம் கொடுத்ததாக பிரியா பவானி ஷங்கர் தெரிவித்திருந்தார். மேலும், ராசி இல்லாத நடிகை என விமர்சனம் செய்பவர்கள் பிறரை புண்படுத்தும் வகையில் பேச வேண்டாம் எனவும் சொல்லி இருந்தார். ராசி இல்லாதவன்னு சொல்லாதீங்க என மிகவும் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து அவர் கோவையில் நேற்று மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பதில் கொடுத்திருக்கிறார். “நடிகர்களான நாங்களும் மனுஷங்கதானே... உங்களை பிறர் காயப்படுத்தினால் எப்படி உங்களுக்கு கஷ்டமாக இருக்குமோ அப்படித்தான் எனக்கும்! மற்றபடி படங்கள் குறித்து வரும் விமர்சனத்தை நான் குறை சொல்லவில்லை. நல்லது போலவே படத்தில் இருக்கும் நெகட்டிவ் விஷயங்களையும் நீங்கள் சொன்னால்தான் நாங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.
ஆனால், டிஜிட்டல் மீடியாவில் யார் என்றே தெரியாமல் முகத்தை மறைத்துக் கொண்டு தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்பவர்களை நினைத்தால்தான் கஷ்டமாக இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.