‘’மைக்கேல் ஜாக்சனும் நானும் இணைந்து ‘எந்திரன்' படத்தில் பாட இருந்தோம்!’’ - ஏ.ஆர்.ரஹ்மான்
‘’2009-ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்துக்கு சென்றிருந்தேன். அங்கே என்னுடைய ஏஜென்ட் அவருடைய இன்னொரு நண்பரை அறிமுகப்படுத்தி இவர்தான் மைக்கேல் ஜாக்சனை நிர்வகிக்கும் மேனேஜர் என்று சொன்னார். நான் உடனே அவரை டெஸ்ட் பண்ணலாம் எனச் சும்மா ‘மைக்கேல் ஜாக்சனை மீட் பண்ணமுடியுமா’ எனக்கேட்டேன். ‘தராளமா’ என்றவர் மெயில் அனுப்புறேன் என்று சொல்லிவிட்டுப்போனார்.
ஒரு வாரம் ஆனது எந்த மெயிலும் வரவில்லை. சரி பரவாயில்லை என நான் விட்டுவிட்டேன். அந்த நேரத்தில்தான் ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்ட் வெளியானது. அதில் என்னுடைய பெயரும் இருந்தது. அப்போது எனக்கு ‘மைக்கேல் உங்களை சந்திக்க விரும்புகிறார்’ என மெயில் வந்தது. ஆனால், நான் இந்தமுறை இப்போது அவரை நான் சந்திக்க விரும்பவில்லை. ஆஸ்கார் விருதை வென்றுவிட்டு வந்து அவரை சந்திக்கிறேன் என மெயில் அனுப்பினேன்.
எனக்கு நிச்சயம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. ஆஸ்கார் வாங்கவில்லை என்றால் மைக்கேல் ஜாக்சனை சந்திக்கவேண்டாம் எனவும் முடிவெடுத்துவிட்டேன். ஆனால் நான் ஆஸ்கார் வென்றேன். ஆஸ்கார் விருதுடன் அடுத்தநாள் மைக்கேல் ஜாக்சனின் வீட்டுக்குப்போனேன்.
மாலை 6.30 மணி. பொழுது சாய்கிறது. என்னுடைய டிரைவர் மைக்கேலின் வீட்டில் என்னை டிராப் செய்துவிட்டுப் போய்விட்டார். நான் உள்ளே சென்றேன். கையில் கிளவுஸ் அணிந்திருந்த மைக்கேல் ஜாக்சன் கதவைத்திறந்து என்னை வரவேற்றார். நானும் அப்போது 2 ஆஸ்கர் விருதுகளை வென்றிருந்தால் பயங்கர உற்சாகத்தில் இருந்தேன். அவரிடம் பேசினேன். மைக்கேல் மிகவும் கனிவோடு இருந்தார். ‘உங்கள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, எப்படி புரோகிராம் செய்கிறீர்கள்’ என்றெல்லாம் என்னிடம் கேட்டார். உலக அமைதி பற்றி பேசினார். என்னை அவரது குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.
இரண்டு மணி நேரம் அவரோடு இருந்தேன். ‘நான் டான்ஸ் ஆடினால் என் இதயத்தில் இருந்து ஆடுவேன்’ என திடீரென ஒரு ஸ்டெப் ஆடினார். வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு அது.
சென்னை வந்ததும் இயக்குநர் ஷங்கரிடம் மைக்கேல் ஜாக்சனை சந்தித்த அனுபவத்தை சொன்னேன். அவர் உடனே நீங்கள் இருவரும் இணைந்து ‘எந்திரன்' படத்துக்கு ஒரு பாடல் பண்ணலாமே எனச்சொல்ல, ‘’வாவ்… நல்ல ஐடியாவா இருக்கே… அவர் தமிழ் பாட்டு பாடுவாரா’’ என நான் உடனே மைக்கேல் ஜாக்சனைத் தொடர்பு கொண்டேன். நாங்கள் இருவரும் மீண்டும் சந்தித்தோம். ஆனால், அதன்பிறகு என்ன நடந்தது என எல்லோருக்கும் தெரியும். அப்போதே அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார். எந்திரனுக்கு முன்பாகவே அவர் மரணித்துவிட்டார்’’ என மைக்கேல் ஜாக்சனுடனான அனுபவத்தைப் பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!