''சைந்தவி மருமகளாக மீண்டும் என் வீட்டுக்கு வரவேண்டும்'' - மனம் திறந்து பேசிய ஏ.ஆர். ரைஹானா!
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் தங்கள் மணவாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்கள். இதனை அடுத்து இவர்களது பிரிவுக்கு காரணம் இதுதான் என பல விஷயங்களை இணையவெளியில் விவாதிக்கத் தொடங்கி விட்டார்கள். இது தங்களின் தனிப்பட்ட விஷயம் எனவும் இதை பொதுவெளியில் பலரும் விவாதிப்பதை விரும்பவில்லை என்றும் இந்த ஜோடி அறிக்கையில் தெரிவித்திருந்தார்கள்.
இந்த நிலையில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி பிரிவு குறித்து ஜிவி பிரகாஷின் அம்மாவும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரைஹானா ஒரு யூடியூப் சேனல் பேட்டியில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
“ஜிவி பிரகாஷூம் சைந்தவியும் சேர்ந்து வாழ முடிவு செய்தார்கள். பிரிய வேண்டும் என்று நினைத்ததும் அவர்கள் முடிவுதான். சேர்ந்து வாழ்பவர்களிடம் பிரிந்து விடுங்கள் என்று சொன்னால் அது நடக்காது. அதேபோலதான் பிரிந்தவர்களிடம் போய் ஒன்றாக வாழுங்கள் என்று சொன்னாலும் நடக்காது. இதுதான் விதி. சைந்தவி மிகவும் திறமையான பெண். பல விஷயங்களில் என் மகனுக்கு கஷ்டமாக இருந்தாலும் அட்ஜெஸ்ட் செய்திருக்கிறான். ஆனால், அதையும் மீறி அவர்கள் பிரிந்து விட்டார்கள்.
என் மகளை விட அதிக விஷயங்கள் சைந்தவியிடம்தான் நான் பேசுவேன். இப்போது நினைத்தாலும் அவரிடம் என்னால் பேச முடியும். பல விஷயங்கள் கேட்க முடியும். இவர்கள் பிரிந்தது எனக்கு வருத்தம்தான். விவாகரத்து பற்றி என் மகனிடம் பேசினேன். அவன் சொன்ன காரணங்கள் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும் அதில் ஒரு நியாயம் இருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் என்று பிரார்த்திருக்கிறேன். சைந்தவி என் மருமகளாக வீட்டிற்கு திரும்பி வருவதை நான் மிகவும் விரும்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.