நடிகர் ஜெயம் ரவி படத்துக்கு வந்த புதிய பிரச்னை.... படுகர் இன மக்கள் போலீஸில் புகார்!
ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில்தான் நடிகர் ஜெயம்ரவி தன் மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து பற்றி பொதுவெளியில் மனம் திறந்தார். பாடகி கெனிஷாவுடன் தன்னை இணைத்துப் பேசுவது தவறானது என்றும் கூறினார்.
மேலும், ‘பிரதர்’ படவிழாவில் எடுத்தப் புகைப்படத்தை தனது சமூகவலதளப் பக்கத்தில் பகிர்ந்து, ‘புதிய நான்’ என்றும் கேப்ஷன் கொடுத்திருந்தார். இந்தப் படத்தில் ‘படுகா பாடல்’ ஒன்று இடம்பெற்றிருக்கிறது. படுகர் இன மக்களின் குலதெய்வமான ‘ஹெத்தையம்மா’ பற்றிய பாடல்தான் இது.
வருடா வருடம் ஹெத்தையம்மாவுக்கு படுகர் இன மக்கள் விழா எடுத்து கொண்டாடுவார்கள். இதற்காக 48 நாட்கள் விரதம் இருந்து பயபக்தியோடு விழா எடுத்து ஆண்கள், பெண்கள் இருவரும் வெள்ளை நிறத்திலான படுகர் இன உடை அணிந்து கொண்டு விழாவில் பங்கேற்பார்கள். தங்கள் ஆரோக்கியத்தை ஹெத்தையம்மன் காக்கிறார் என்பதுதான் படுகர் மக்களின் நம்பிக்கை.
இந்த ஹெத்தையம்மன் வரலாறு முழுதாக தெரியாமலும், மரியாதையற்ற வகையிலும் இந்த பாடல் அமைந்திருப்பதால் தங்களை புண்படுத்தியிருப்பதாக படுகர் இன மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகளை நீக்க வேண்டும் எனவும், படம் வெளியாவதற்கு முன்பு படுகர் இன சமுதாய பிரதிநிதிகளுக்கு படத்தை திரையிட்டு காட்ட வேண்டும் எனவும் நீலகிரி மாவட்ட காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளனர்.