சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா நான்காவது திருமணம்… மணவாழ்வில் நம்பிக்கையா, மன நோயா?!
2003-ம் ஆண்டில் கிட்டத்தட்ட தனது 20-வது வயதில் நடிகராக அறிமுகமான பாலா, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய படங்களில் நடித்துவந்தார். இவர் முதலில் கர்நாடகாவைச் சேர்ந்த சந்தனா சதாசிவா என்கிற நடிகையைத் திருமணம் செய்தார். இந்த திருமணம் விவாகரத்துக்கு வரும் முன்பாகவே இரண்டாவதாக கேரளாவைச் சேர்ந்த பாடகி அம்ருதா என்பவரைக் காதலித்தார்.
‘’தனக்குத் திருமணமானதே தெரியாமல் உண்மையை மறைத்து என்னை காதலித்தார். எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தப் பின்னர்தான் ஏற்கெனவே பாலாவுக்குத் திருமணமாகியிருப்பது தெரிந்தது. ஆனால், காதலில் தீவிரமாக இருந்ததோடு, அப்போது எனக்கு வெறும் 18 வயதுதான் என்பதால் பாலாவை நம்பினேன். ஆனால், அவர் என்னை அடித்து சித்ரவதை செய்தார். என் குழந்தையையும் துன்புறுத்தினார். அதனால் தப்பித்து வீட்டைவிட்டு ஓடிவந்தேன்'’ என்று சமீபத்தில் பேட்டியளித்திருந்தார் அம்ருதா. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். மகளையும் டார்ச்சர் செய்வதாகச்சொல்லி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்ருதா போலீஸில் புகார் அளிக்க, பாலா கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலா - அம்ருதா வாழ்க்கையைத்தான் சிறுத்தை சிவா ‘விஸ்வாசம்' படமாக எடுத்தார் என அப்போது சொல்லப்பட்டது. இதற்கிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் எலிசபெத் எனும் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்த பாலா, அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். சமீபத்தில் பாலாவுக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சையும் நடந்தது.
இந்த சூழலில்தான் இன்று காலை கேரளாவில் வைத்து நான்காவது திருமணமாக தன்னுடைய தாய் மாமன் மகள் கோகிலா என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார் பாலா. ‘’என்னுடைய 250 கோடி சொத்தை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. எனக்கு அறுவைசிகிச்சை நடந்தபோது கூடவே இருந்து பார்த்துக்கொண்டவர் கோகிலா. என் உறவுப் பெண் என்பதால் இந்த திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என நம்புகிறேன்'’ எனச்சொல்லியிருக்கிறார் பாலா.
‘’நான்காவது திருமணம் செய்திருக்கும் பாலா, மூன்று திருமணங்கள் செய்த வனிதா விஜயகுமார் உள்பட பலரின் வாழ்க்கையும் ஒரே பேட்டர்னில் இருக்கும். இது ஒரு மனநோய்’’ என்கிறார்கள் மருத்துவர்கள். ‘’இதற்கு சிங்கிள் மோனோகாமி எனப்பெயர். இவர்கள் தனிமையை விரும்பமாட்டார்கள். தனிமையாக இருப்பதில் பாதுகாப்பின்மையை உணர்வார்கள். ஒரு நேரத்தில் ஒருவரோடுதான் உறவில் இருப்பார்கள். ஆனால், ஒரு உறவு முழுமையாக முடிவதற்கு முன்பாகவோ அல்லது அந்த உறவை சரி செய்வதற்கு முன்பாகவோ எதையும் யோசிக்காமல் அடுத்த உறவில் இறங்கிவிடுவார்கள். அதுவும் வேகவேகமாக மிகத்தீவிரமாக இறங்குவார்கள். அதேவேகத்தில் அந்த உறவில் இருந்து வெளியேறுவார்கள்’’ என்கிறார்கள் மருத்துவர்கள்.