தவெக முதல் மாநாடு... குட்டி கதை சொல்லி அழைக்கும் விஜய்யின் நிர்வாகி!
நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடக்க இருப்பதை முன்னிட்டு அதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், தஞ்சையில் நேற்று மாலை, முதல் மாநாட்டிற்கான அழைப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதில் புஸ்ஸி ஆனந்த் பேசும்போது ''எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்று சொல்லுகிற தலைவன் தளபதி என்பதை சொல்லிக் கொள்கிறேன். நம் நிர்வாகி ஒருவர் ’எனக்கு லீவ் வேணும் முதலாளி’ எனக் கேட்டபோது, ’26, 27 எவ்வளவு முக்கியமான நாள் நீ லீவு கேட்கிறியே?’ என முதலாளி கூற ‘முதலாளி நான் உன்கிட்ட 18 வருஷமா வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். எனக்கு இரண்டு நாள் லீவு கொடுக்கக்கூடாது’ என்று கேட்டிருக்கிறார்.
’அப்படி நீ லீவ் எடுத்தா உனக்கு போனஸ் கிடையாது. வேலையை விட்டும் எடுத்துடுவேன்’ என கூறிய முதலாளியிடம், ‘நீ வேலையை விட்டு எடுத்தா என்ன? போனஸ் கொடுக்காட்டி என்ன? என் தலைவன் தளபதியை நான் பார்க்க வேண்டும். உன் வேலையும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம்’ என சொல்லக்கூடிய ஒரு உண்மையான தொண்டன் இருக்கிறான் என்றால் அது நமது தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டன் தான்'' என குட்டி கதை கூறி மாநாட்டிற்கு நிர்வாகி மற்றும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்.