சினிமா விமர்சனம் : ‘அமரன்’ முழுக்க முழுக்க ராணுவ தரப்பை மட்டுமே சொன்னது சரியா?!
‘பயோபிக்’ எடுப்பதில் சில சவால்கள் இருக்கின்றன. உண்மைச் சம்பவங்களை அப்படியே பின்பற்ற வேண்டும். மாற்ற முடியாது. அவை ஏற்கெனவே பொதுவில் அறியப்பட்டவை. அதே சமயத்தில் சினிமாவிற்கேற்ற சுவாரசியமாகவும் அவற்றை மாற்ற வேண்டும். இந்தச் சவாலை வெற்றிகரமாக கையாண்டிருக்கிறது ‘அமரன்’.
மேஜர் முகுந்த் வரதராஜன், சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர். 2014-ம் ஆண்டில், ஜம்மூ காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நிகழ்ந்த மோதலில் வெற்றி பெற்று, மூன்று பயங்கரவாதிகளைக் கொன்று, அப்போது ஏற்பட்ட காயங்களினால் பிறகு வீரமரணம் அடைந்தவர். ராணுவத்தின் மிக உயரிய விருதான ‘அசோக சக்ரா’ இவரது மரணத்திற்குப் பிறகு வழங்கப்பட்டது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரமும் தியாகமும் காதலும் ‘அமரன்’ திரைப்படத்தின் வழியாக பதிவாவது சிறந்த விஷயம்.
ஷிவ் அரூர், ராகுல் சிங்குடன் இணைந்து எழுதிய ‘India's Most Fearless: True Stories of Modern Military Heroes’ என்கிற நூலை அடிப்படையாக் கொண்டு ‘அமரன்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அது தவிர நிறைய கள ஆய்வுகள், நேர்காணல்கள், முகுந்த் வரதராஜனின் குடும்பத்தாரிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் போன்றவற்றின் மூலம் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி உணர்வுப்பூர்வமான காட்சிகளின் வழியே இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
காதலும் வீரமும்
சங்க காலத்தில் தமிழ் சமூகத்தின் அடையாளமாகச் சொல்லப்பட்டது, வீரமும் காதலும். அதை இந்தப் படத்தின் திரைக்கதை கச்சிதமாகப் பின்பற்றியுள்ளது. அமரன் படத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று முகுந்த் தம்பதியினரின் காதல், இன்னொன்று ராணுவப் படைப் பிரிவில் முகுந்த் செயல்படும் வீரம்.
‘எல்லையில் ராணுவ வீரர்கள்’ என்று சோஷியல் மீடியாவின் கமென்ட் பாக்ஸ்களில் எளிதாக கிண்டல் செய்யப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால் ஒரு தேசத்தின் அடிப்படையான பாதுகாப்பை உறுதி செய்வது ராணுவம்தான். ராணுவத்திற்கு வேறு சில பக்கங்களும் இருப்பது தனிக்கதை. ஆனால் ஒரு நாட்டின் மக்கள் நிம்மதியாக அன்றாட வாழ்க்கையை கழிப்பதற்கு மறைமுகமான காரணியாக இருப்பது ராணுவம்தான். அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் இது போன்ற படைப்புகள்தான் பொதுமக்களுக்கு உணர்த்த முடியும். அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிருக்கும் ‘அமரன்’ திரைப்படம் வரவேற்கப்பட வேண்டியதொன்று.
சிவகார்த்திகேயனின் டிரான்ஸ்ஃபர்மேஷன் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கிறது. மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக, காமெடியனாக தன் கேரியரைத் துவங்கியவர், தன்னுடைய பிரத்யேக நகைச்சுவைத் திறமை காரணமாக ஹீரோ அந்தஸ்திற்கு உயர்ந்தார். அப்படி உயர்வது கூட ஆச்சரியமில்லை. அப்படி உயர்ந்தவர்கள் ஒரு படத்தோடு காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் போட்டி நிறைந்த சூழலில் தன்னுடைய நிலையை தக்க வைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் கடந்தபடி அவர் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருப்பது சாதாரண விஷயமில்லை.
சிவகார்த்திகேயனின் பிரமிக்கத்தக்க உருமாற்றம்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின்’ ஹீரோதான் எஸ்.கேவிற்குப் பொருத்தமான பிம்பம். ஆனால் அதை உடைத்துக் கொண்டு ஒரு ராணுவ மேஜர் ரோலுக்கு மிடுக்காக கூடு பாய்வது பிரமிக்கத்தக்க உருமாற்றம். அதை அமரன் படத்தின் வழியாக சிறப்பாகவே நிகழ்த்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
ஆரம்பக் காட்சியில் நிகழும் ‘prank operation’-ல் போலியான ரத்தத்தை துடைத்தபடி சிரிக்கும் ஹீரோவைப் பார்த்த போது ‘என்னடா இது.. காமெடியாகப் போய் விடுமோ?’ என்று ஜெர்க் ஆனது. ஆனால் அடுத்த நிமிடமே ‘’இது prank இல்ல. Practice drill’’ என்று ஒவ்வொரு சிப்பாயின் அஜாக்கிரதையையும் உறுமியபடி சுட்டிக் காட்டும் போது எஸ்கேவின் சிரிப்புச் சித்திரம் ஒட்டுமொத்தமாக மறைந்து ராணுவத்தின் மிடுக்கு வந்து விடுகிறது. இந்த மிடுக்கும் கம்பீரமும் படம் முழுவதும் குறையவில்லை. எஸ்கே என்கிற நடிகர் மறைந்து மேஜர் முகுந்த்தான் வெளிப்பட்டார். இது சம்பந்தப்பட்ட நடிகருக்கும் இயக்குநருக்கும் கிடைத்த கூட்டு வெற்றி.
ஹீரோவிற்கு நிகராக ஹீரோயினுக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் உருவாக்கித் தரும் இயக்குநர்கள் அரிதானவர்கள். முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ்-ஆக சாய் பல்லவி நடித்திருக்கிறார். அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக அமரன் இருக்கும். அத்தனை மகத்தான பங்களிப்பு. ‘பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்று சம்பிரதாய வார்த்தைகளில் சொல்வார்கள். இந்தப் படத்தைப் பொறுத்தவரை சாய் பல்லவிக்கு உண்மையாகவே அதை சொல்லி விடலாம்.
சாய் பல்லவியின் அட்டகாசமான நடிப்பு
கல்லூரி இளைஞன் முகுந்த் மீது காதல் கொள்ளுமிடம், ‘சேட்டா’விற்கு அர்த்தம் சொல்லி விட்டு ஒளிந்து கொள்ளும் காட்சி, காதலுக்குத் தடை ஏற்படும் போது தனியறையில் தலையைப் பிய்த்துக் கொண்டு அழுது விட்டு வெளியே வரும் காட்சி, பயங்கரவாதிகளால் எதிர்பாராத தாக்குதலில் முகுந்த் மாட்டிக் கொள்ளும் போது செல்போனில் கதறியழும் காட்சி, வீடியோ காலில் ‘‘யார் முன்னாடியும் நீ அழக்கூடாது’’ என்று கணவன் சொன்னதைப் பின்பற்றி சடலத்தின் முன்னால் உறைந்து போன முகத்துடன் அமர்ந்திருப்பது என்று பல காட்சிகளில் சாய் பல்லவியின் நடிப்பு கொடி கட்டிப் பறக்கிறது.
‘முகுந்தே’ என்று மலையாள வாசனையுடன் அவர் கணவனை அழைக்கும் இடமெங்கிலும் காதில் தேன் வந்து பாய்கிறது. அத்தனை ரொமான்ஸ். ‘நாணம்’ என்கிற உணர்ச்சியை இயல்பான வசீகரத்துடன் வெளிப்படுத்தும் அரிதான நடிகைகளுள் ஒருவராக சாய் பல்லவியைச் சொல்லலாம். தொலை தூரத்தில் இருக்கும் கணவனின் பிரிவுத் துயரை மௌனமான துக்கத்துடன் விழுங்கிக் கொள்ளும் காட்சிகளில் நெகிழ வைத்திருக்கிறார்.
உறுதுணையாக பயணித்திருக்கும் துணைப் பாத்திரங்கள்
சாய் பல்லவியின் தந்தையாக இயக்குநர் ஷியாம் பிரசாத். சில காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும் அத்தனை இயல்பான நடிப்பு. அதைப் போலவே சிவகார்த்திகேயனின் தந்தையாக நடித்திருப்பவர் இயல்பான தோற்றம் மட்டுமல்லாது நடிப்பையும் அதே போல் எளிமையாகத் தந்திருக்கிறார்.
கீதா கைலாசம் தான் நடித்து வரும் பாத்திரங்கள் அனைத்தையும் சுவாரசியமாக்கிக் கொண்டு வருகிறார். அந்த வரிசையில் முகுந்தின் அம்மாவாக அவரின் பங்களிப்பு இந்தப் படத்தில் அதி சுவாரசியம். உணர்வுப்பூர்வமான காட்சிகளின் இறுக்கத்திற்கு நடுவே இயல்பான கலகலப்பை வழங்குவது இந்தப் பாத்திரம்தான். மிலிட்டரிக்குச் செல்லும் மகன் குறித்தான கவலை, வேற்று மதத்தைச் சேர்ந்த மலையாளப் பெண்ணை மகன் விரும்புவது குறித்தான நெருடல், அந்தக் காதலின் உறுதி கண்டு இயல்பாக ஏற்றுக் கொள்ளுதல் என்று ஒரு அசலான அம்மா கேரக்டரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.
கமாண்டர் ஆபிசராக ராகுல் போஸ். உயிர் தியாகம் செய்யும் சிப்பாயாக புவன் அரோரா போன்றவர்கள் சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். “எங்க பரம்பரையே ராணுவத்தில்தான் இருக்கிறது. என் மகனும் பிறகு இணைவான்’’ என்று விக்ரம் சிங் பாத்திரம் சொல்லும் போது சீக்கியர்களின் ராணுவப் பங்களிப்பு குறித்து மெய் சிலிர்க்கிறது. தென்னிந்திய தலைமுறைக்கு போர் குறித்த நேரடி அனுபவம் இல்லாததால் அதன் பாதிப்பை பெரிதும் உணர முடியாது. பூகோள அமைப்பின் சௌகரியம் அப்படி. ஆனால் வட இந்தியர்கள், குறிப்பாக எல்லைப் பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ராணுவத்தின் முக்கியத்துவம் தெரியும்.
ராணுவத்தினரின் தியாகமும் பாசமும் குடும்பத்தை விட்டு தொலைதூரத்தில் மரணத்திற்கு நடுவே வாழ வேண்டியிருக்கிற சூழலும் இந்தப் படத்தில் சரியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக ராணுவத்தில் பணிபுரிகிறவர்களின் உறவுகள் நெடுங்காலத்திற்கு பிரிந்திருக்க வேண்டிய சோகமும் பல காட்சிகளில் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது. ‘’அப்பா.. எப்பப்பா வருவீங்க?” என்று முகுந்த்தின் மகள் கேட்கும் காட்சிகளில் நமக்கு கண்ணீர் திரள்கிறது.
படத்தில் தென்படும் பிசிறுகள், நெருடல்கள்
சிஎச் சாயின் அட்டகாசமான ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷின் அதிரடியான பின்னணி இசை, இனிமையான பாடல்கள், கலைவாணனின் சிறந்த எடிட்டிங் போன்ற தொழில்நுட்பக் கூட்டணி படத்தின் பிரம்மாண்டத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. குறிப்பாக பயங்கரவாதிகளுக்கு ராணுவத்திற்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகளின் வடிவமைப்பும் எக்சிகியூஷனும் அருமை.
ஆனால் படத்தில் சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை. காஷ்மீர் பிரச்சினை என்பது சுதந்திரம் பெற்றதில் இருந்தே இந்தியாவின் தீராத தலைவலியாக இருந்து வருகிறது. ‘‘ஏம்ப்பா அந்த இடத்துல இவ்வளவு பிரச்சினை… எப்ப தீரும்?” என்று முகுந்தின் அப்பா கேட்கும் காட்சியில், “பேச வேண்டியவங்க பேசணும்.. நாம பேசி என்ன உபயோகம்?” என்று பதில் சொல்லி முகுந்த் கடந்து விடுவார். சாதாரணமானது போல் தென்பட்டாலும் இதிலிருக்கும் அரசியலை அழுத்தமாக உணர்த்துகிற வசனம் அது.
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல ஒரு பிரச்சினைக்கு இரண்டிற்கும் மேற்பட்ட பக்கங்களும் இருக்கக்கூடும். ‘அமரன்’ திரைப்படம் முழுக்க முழுக்க ராணுவத்தின் கோணத்திலேயே இயங்கியிருக்கிறதே ஒழிய, சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் வாழ்பவர்களின் தரப்பிலான கோணம் சரியாக சொல்லப்படவில்லை.
போலவே obedience என்பது ஒரு ராணுவ வீரனின் அடிப்படையான பண்பாக இருக்க வேண்டும். மேல் அதிகாரி ‘குதி’ என்று சொன்னால் எங்கிருந்தாலும் மறுக்காமல் உடனே குதிக்க வேண்டும். அதே சமயத்தில் அந்த வீரனுக்கு ஆபத்து ஏற்படாது என்பதை அறிந்து குதிக்கச் சொல்பவர்தான் நல்ல அதிகாரியாக இருக்க முடியும்.
தன்னுடைய கம்பெனியில் உள்ள வீரர்களுக்கு ஆபத்து எனும் போது உயர் அதிகாரிகளின் பேச்சையும் மீறி முகுந்த் ஆபத்தான பகுதிகளில் சாகசம் செய்கிறார். இது போன்ற காட்சிகளில் ராணுவத் தியாகம் என்பது சினிமாத்தனமான ஹீரோயிஸமாக மாறி விடுகிறது. சக வீரனுக்கு ஆபத்து என்னும் போது தன்னிச்சையாக துடிப்பது இயல்பானதுதான். ஆனால் அதற்காக முன்னெச்சரிக்கைளையும் மீறிச் சென்று செய்யும் சாகசங்களால் மேலதிகமான உயிர்கள் போவதற்கு வாய்ப்புள்ளது. ‘’சண்டையில் வெற்றி பெறுவது கூட பிறகுதான். என்னுடைய கம்பெனியில் உள்ள ஒரு வீரனுக்கு கூட அடிபடக்கூடாது’’ என்பதில் முகுந்த் வரதராஜன் கவனமாக இருப்பார் என்று அவரது வழக்கம் பற்றி சொல்லப்படுகிறது. ஆனால் படத்தில் இதற்கு முரணாக சித்தரிக்கப்பட்டிருக்கிறதோ?!
ராணுவ வாழ்க்கையின் சித்தரிப்புகளை யதார்தத்திற்கு மிக நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கும் தமிழ் சினிமாக்கள் மிகக் குறைவானது. அந்த வகையில் ‘அமரன்’ ஒரு முக்கியமான திரைப்படமாக இருக்கும். ஒரு ராணுவ வீரனின் தியாகம், காதல், வீரம், பாசம் உள்ளிட்ட பல அம்சங்களை சரியாக சித்தரித்து மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு சிறப்பான அஞ்சலியைத் தந்திருக்கிறது ‘அமரன்’.