சினிமா விமர்சனம் : கவினின் ‘Bloody beggar’ கூறுகெட்ட குக்கர் ஆனது எப்படி?!
ஹாலிவுட் உள்ளிட்டு இதர தேசங்களின் சினிமாக்களை தமிழில் சுடுவதென்பது எல்லோரும் அறிந்த நீண்ட காலமாக நடக்கிற விஷயம். சிலர் மட்டுமே அனுமதி வாங்கி அதிகாரப்பூர்வமான ரீமேக்காக உருவாக்குவார்கள். ஆனால் பலரும் முழுக்கதையையோ அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவியோ பயன்படுத்திக் கொள்வார்கள்.
அது, அஃபிசியல் ரீமேக்கோ அல்லது சுட்டதோ, எப்படியோ செய்து விட்டுப் போகட்டும். ஏற்கெனவே சிறப்பாக உருவாக்கி வைத்திருக்கின்ற ஒன்றை மேலும் சிறப்பாக காப்பிடியப்பதுதானே திறமை?! பெரும்பாலான தமிழ் இயக்குநர்களுக்கு இந்தத் திறமை கூட இல்லை என்பதுதான் பரிதாபம்.
தமிழ் ஆடியன்சுக்கு ரீச் ஆக வேண்டுமே என்கிற வியாபார நோக்கம் காரணமாக, ஹாலிவுட் கதையில் சம்பந்தமேயில்லாமல் உள்ளூர் சென்டிமென்ட்டை பிழிந்து விடுவார்கள். ‘பீட்ஸாவுக்கு வடகறி சைட்டிஷ்’ என்கிற மாதிரி இது இரண்டுங்கெட்டான் சமையலாக மாறி விடும். வாயில் வைக்க விளங்காது.
பிளடி பெக்கர், கூறு கெட்ட குக்கராக ஆன கதை!
2019-ல் வெளிவந்த ‘Ready or Not’ என்கிற ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான வாசனை இந்தப் படத்தில் வீசுகிறது. திருமணமாகி வீட்டிற்குள் நுழையும் மணமகளை, விளையாட்டு என்கிற போர்வையில் வீட்டில் உள்ள அனைவரும் கொல்வதற்காக துரத்துவார்கள். மணப்பெண் அந்த ஆபத்திலிருந்து தப்பித்தாளா என்பதுதான் அந்தப் படத்தின் திரைக்கதை. ஒரே இரவில் நடக்கும் கதையை விறுவிறுப்பாக எடுத்திருப்பார்கள். படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை சுவாரசியத்துக்கு குறைவே இருக்காது.
‘பிளடி பெக்கர்’ திரைப்படத்தில் இந்தக் கதையின் அவுட்லைனை திறமையாக நகலெடுத்திருந்தாலும் சுவாரசியமற்ற திரைக்கதை, அநாவசியமான சென்டிமென்ட் போன்ற காரணங்களால் ஈர்க்கத் தவறி விட்டது.
இளம் வயதில் பெற்றோரை இழந்த ஒரு சிறுவன் ஆதரவற்றவனாக மாறுகிறான். பிச்சையெடுத்துப் பிழைக்கிறான். ஒரு பெரிய அரண்மனையைப் பார்த்து ‘இதற்குள் எல்லாம் தன்னால் வாழ முடியுமா?’ என்று கனவு காண்கிறான். அவன் வளர்ந்து பெரியவன் ஆன பிறகு அப்படியொரு வாய்ப்பு கிடைக்கிறது. தெவச சாப்பாட்டிற்காக பிச்சைக்காரர்களை அந்த அரண்மனையில் அழைத்து சாப்பாடு போடுகிறார்கள்.
யாருக்கும் தெரியாமல் அரண்மனைக்குள் நுழையும் பிச்சைக்காரன், ஒன்றிரண்டு நாட்கள் ஜாலியாக இருந்து விட்டு திரும்பி விடலாம் என்று நினைக்கிறான். ஆனால் அவன் அங்கிருந்து திரும்பவே முடியாதபடிக்கு பிரச்னைகள் ஏற்படுகின்றன. சொத்தின் மீது பேராசை கொண்ட அரண்மனையைச் சேர்ந்தவர்கள், பிச்சைக்காரனைக் கொல்வதற்காக கொலைவெறியுடன் துரத்துகிறார்கள். உண்மையில் யார் பிச்சைக்காரன் என்கிற கேள்வியுடன் படம் முடிகிறது.
அரண்மனையை வாங்க விரும்பும் அமைதிப்படை அமாவாசை!
இயக்குநர் நெல்சனிடம் (தயாரிப்பாளரும் இவரே) உதவி இயக்குநராக இருந்த சிவபாலன் முத்துக்குமார், முதன்முதலாக இயக்கியிருக்கும் படம் இது. கேரக்டர் ஸ்கெட்ச் முதற்கொண்டு பாத்திரங்களின் உடல்மொழி வரை நெல்சனின் பாணியைப் பின்பற்றியிருப்பது தெரிகிறது.
ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதை எதிர்பார்க்கவே முடியாது. அப்படி நடந்தால் என்னவாகும் (கோலமாவு கோகிலா) என்று இரண்டு எதிர்முனைகளை இணைப்பது நெல்சனின் பாணி. நெல்சனின் திரைப்படங்களில் ‘Breaking Bad’ போன்ற வெப்சீரிஸ்களின் தாக்கம் நிறைய இருக்கும். இந்தப் படத்திலும் அப்படியே. ‘அமைதிப்படை’ அமாவாசை மாதிரியான ஒரு பிச்சைக்காரன், அரண்மனையில் வாழ ஆசைப்பட்டால் என்னவாகும் என்பதுதான் பிளாட்.
பெயரில்லாத பிச்சைக்காரன் பாத்திரத்தில் கவின் நடித்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது. தனது பாத்திரத்திற்காக ஒப்பனை, உடல்மொழி முதற்கொண்டு நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். இயக்குநரை நம்பி தன்னை ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அத்தனையும் வீணாகி விட்டது.
எல்லாமே நல்லாத்தான் இருக்கு… ஆனா?
நல்லது செய்யும் ஆவி, நடிப்புப் பைத்தியம், தந்திரமான வக்கீல், பேராசைக் கொண்ட கிழவி, சக்களத்தி மீது கோபமுள்ள மனைவி, வெளியே வீரம், உள்ளே கோழையாக உள்ள கணவன், மனச்சாட்சியுள்ள இளம்பெண் என்று அரண்மனையில் உள்ள ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கேரக்டர் ஸ்கெட்சை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். போலவே திரைக்கதையில் இருக்க வேண்டிய இணைப்புப் புள்ளிகளும் சரியாகவே திட்டமிடப்பட்டிருக்கிறது.
நடிகர்களின் தேர்வும் கூட சரியாகவே அமைந்திருக்கிறது. மகா நடிகர் சந்திரபோஸின் வாரிசுகள் என்று அதன் பின்னணியும் கூட சுவாரசியமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் - சமைப்பதற்கான பொருட்கள் அனைத்தும் கச்சிதமாக அமைந்தும் உணவு ருசியாக இல்லை என்கிற கதை மாதிரி ஆகி விட்டது.
அரண்மனைதான் இந்தப் படத்தின் களம். ஏறத்தாழ முழு திரைப்படமும் இதற்குள்தான் நடக்கிறது. எனவே அந்த அரண்மனையும் அரங்கப் பொருட்களும் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டு ஆர்ட் டிபார்ட்மெண்ட்டின் உழைப்பை நிரூபித்திருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை போன்ற தொழில்நுட்ப விஷயங்களும் போதுமான அளவிற்கு சரியாகவே அமைந்திருக்கின்றன.
இத்தனை அருமையான விஷயங்களை வைத்துக் கொண்டு இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் கோட்டை விட்டிருப்பதுதான் பரிதாபம். ‘ஹாரர் காமெடி’ என்று தீர்மானித்துக் கொண்ட பிறகு அதன் தீவிரத்தை திரைக்கதைக்குள் வைத்திருந்தால் பார்வையாளர்கள் திகைத்து படத்துடன் ஐக்கியமாவார்கள். இதில் வரும் நடிகர்கள் பெரும்பாலும் காமெடி ஆர்ட்டிஸ்ட் போலவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு ஹீரோவின் உருக்கமான பிளாஷ்பேக் பின்னணி, பாடல்கள் வேறு.
தமிழ் பார்வையாளர்களுக்கு ஏற்ப சமைக்க வேண்டும் என்கிற நெருக்கடி காரணமாக திரைக்கதையில் அவ்வப்போது விலகல் ஏற்படுவதால், தர வேண்டிய திகில் அனுபவம் கிடைக்காமல் போயிருக்கிறது.
ஹாலிவுட்டைப் போலவே தமிழிலும் ‘பிளாக் ஹியூமர்’ ஜானரில் நிறைய திரைப்படங்கள் வரவேண்டியது அவசியம். ஆனால் அவை அரைகுறையான முயற்சியாக மாறி பார்வையாளர்களை சோதித்து விடக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக ‘பிளடி பெக்கர்’ அந்த விபத்திற்குள்தான் விழுந்து விட்டது.