GOAT Review : பழைய கதையில் புதிய விஜய்... சொன்னதை செய்தாரா வெங்கட் பிரபு?! முழு முதல் விமர்சனம்!
‘’நாங்க நாலு பேர் எங்களுக்கு பயமே கிடையாது'’ என்பதுபோல விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என இந்த நான்கு பேரும் இந்தியாவின் உளவு அமைப்பான RAW ஏஜென்சியின் கீழ் இயங்கும் ஸ்பெஷல் ஆன்ட்டி டெரரிஸ்ட் குழு(SATS)வில் வேலை செய்கிறார்கள். இந்த நான்கு பேர் குழுவுக்கு பாஸ் ஜெயராம். விஜய்யின் கர்ப்பிணி மனைவி ஸ்னேகாவுக்கோ கணவன் உளவு அமைப்பில் வேலை செய்வதே தெரியாது. எதோ இந்திய அரசின் டூரிசம் டிபார்ட்மென்ட்டில் வேலை செய்வதாக நினைத்துக்கொண்டிருப்பவருக்கு, விஜய்யின் நடவடிக்கைகளைப் பார்த்து ‘வேறு பெண்ணோடு தொடர்பு’ என சந்தேகம் வருகிறது.
ஐந்து வயது மகன் ஜீவனுக்கோ அப்பாதான் ஹீரோ. ‘’அப்பா செம ஃபைட்டுப்பா’’, ‘’செம சேஸுப்பா’’ என கொண்டாடுகிறான். மகன் ஜீவன்தான் விஜய்- ஸ்னேகாவின் வாழ்வின் ஜீவன். அழகான இவர்கள் வாழ்க்கையில் ராஜீவ் மேனன் எனும் மோகன் மூலம் ஆபத்து வருகிறது.
தாய்லாந்தில் ஒரு உளவு ஆப்பரேஷனோடு, தன்னை சந்தேகப்படும் மனைவியையும் சேர்த்து சமாளிக்க குடும்பத்தோடு டூர் கிளம்புகிறார் விஜய். தாய்லாந்தில் மகன் ஜீவன் கடத்தப்படுகிறான். ஒரு விபத்தில் மகனின் பை, ஸ்பைடர் மேன் பொம்மை கிடைப்பதை வைத்து மகன் இறந்துவிட்டதாக நம்புகிறார் விஜய். மகன் இழப்புக்கே காரணமான விஜய்யை வெறுக்கிறார் ஸ்னேகா. இருவரும் பிரிந்து வாழ்ந்து மகளை வளர்க்கும் பொறுப்பில் மட்டும் சேர்ந்திருக்கிறார்கள். உளவு வேலையில் இருந்து ஒதுங்கியிருக்கிறார் விஜய்.
இந்த சூழலில் ரஷ்யாவில் உள்ள இந்தியன் எம்பஸிக்கு பாடம் எடுக்க கிளம்பும் விஜய் எதிர்பாராத விதமாக மகன் ஜீவனை சந்திக்கிறார். அங்கே ஜீவன் சஞ்சய்யாக உருமாறியிருக்கிறான். மகனை அழைத்துக்கொண்டு மீண்டும் சென்னை வந்து பிரிந்திருக்கும் மனைவியோடு ஒன்றுசேருகிறார் விஜய். ஜீவன் மூலம் தன் வாழ்வின் ஜீவனே திரும்பிக் கிடைத்துவிட்டதாக நம்பும் விஜய்க்கு காத்திருக்கும் அதிர்ச்சிகளும், ட்விஸ்ட்டுகளும், சர்ப்ரைஸ்களும்தான் மீதிக்கதை.
‘’என்னடா ‘சத்ரியன்’ படத்தோட கதையெல்லாம் சொல்ற’’ என படத்திலேயே டயலாக் இருக்கிறது. அதுப்போல் கதையைப் பொறுத்தவரை எந்தப் புதுமையும் 'GOAT'-ல் இல்லை. ‘எதாவது புதுசா பண்றேன்னு சொதப்பிடக்கூடாது’ என்பதில் மட்டும் வெங்கட் பிரபு கவனமாக இருந்திருக்கிறார் என்பது படத்தைப் பார்க்கும்போது புரிகிறது.
தன்னுடைய நீண்ட அனுபவம் கைகொடுத்திருப்பதால் விஜய்க்கு என்ன செய்யமுடியுமோ, விஜய் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அது போதும் என கமர்ஷியல் படத்துக்குள் டெக்னாலஜியை நுழைத்து, கிரிக்கெட்டைக் கலந்து, த்ரிஷாவை ஆடவிட்டு, விஜயகாந்துக்கு பில்டப் கொடுத்து, கடைசியில் சிவகார்த்திகேயனுக்கு என்ட்ரி கொடுத்து தன்னால் முடிந்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்த முயற்சித்திருக்கிறார் வெங்கட் பிரபு. அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சமீபத்தில் வந்த விஜய் படங்களில் ‘GOAT’ படமே விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
GOAT-ல் விஜய்யின் அளவில்லா ஆற்றல்தான் ஆச்சர்யமூட்டுகிறது. படம் நீளமாக இருந்தாலும் விஜய் என்கிற மந்திரவாதி படத்தை தாங்கிப்பிடிக்கிறார். தந்தை காந்தியாகவும், மகன் ஜீவன் என்கிற சஞ்சய் (விஜய்யின் சொந்த மகன் பெயரும் சஞ்சய்தான் என்பது குறிப்பிடத்தக்கது) ஆகவும் நல்ல நடிப்பை தந்திருகிறார் விஜய். ‘கில்லி’ காலத்திலேயே பார்த்த வழக்கமான நகைச்சுவை நடிப்பாக இருந்தாலும் தன் உடல்மொழியால் கவனம் ஈர்க்கிறார். சண்டைக்காட்சிகளிலும், நடனத்திலும் தான் ஒரு கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பதை நிரூபித்திருக்கிறார். குறிப்பாக த்ரிஷாவோடு சேர்ந்து ஆடும் ‘மட்ட' பாட்டில் விஜய்யின் நடனம் வேற லெவல். ஹாட்ஸ் ஆஃப் விஜய்.
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் டாப்பாக இல்லையென்றாலும் அவரது ஸ்க்ரீன் ப்ரசன்ஸ் படத்துக்கு உதவியிருக்கிறது. பிரபுதேவா, ஸ்னேகா, லைலா, அஜ்மல், யோகி பாபு என எல்லோருமே தங்களால் முடிந்த அளவுக்கு தங்கள் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.
இசையைப் பொருத்தவரை யுவன் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். சித்தார்த்தின் ஒளிப்பதிவும், வெங்கட்டின் எடிட்டிங்கும் படத்துக்கான பிரமாண்டத்தைக் கூட்டியிருக்கிறது. இளம் விஜய்யை காட்ட டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும் விதத்திலும், ஏஐ மூலம் உருவாகியிருக்கும் விஜயகாந்த்தின் உருவத்திலும் சில குறைகள் இருந்தாலும் அவை உறுத்தலாக இல்லை!
படத்தின் இரண்டாம் பாதி யோகி பாபுவின் ஒன்லைன் காமெடிகளால் கொஞ்சம் தப்பித்தாலும், தேவையேப்படாத மோகன் - ஜீவன் ஃப்ளாஷ்பேக் காட்சிகளால் இழுவையாக இருக்கிறது. ஒவ்வொரு 5 நிமிடத்துக்கு ஒரு சர்ப்ரைஸ் தருகிறேன் என திரைக்கதையையே எக்ஸெல் ஷீட்டாக கணக்குப்போட்டு வெங்கட் பிரபு வேலை பார்த்திருப்பதால் பல சர்ப்ரைஸ்கள் செயற்கையாகவே உள்ளன.
நிச்சயமாக விஜய்யின் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படமாக இது இல்லை. அதேசமயம் மிஸ் செய்யக்கூடிய படமாகவும் GOAT இல்லை. விஜய்யின் எக்ஸ்ட்ரா எனர்ஜிக்காகவும், வெங்கட் பிரபுவின் கமர்ஷியல் கதை சொல்லலுக்காகவும் நிச்சயம் தியேட்டர்களில் பார்க்கலாம்.
GOAT விஜய் ரசிகர்களுக்கான செம FEAST