ராயன் விமர்சனம் : காத்தவராயனா 'கத்திக்குத்து' ராயனா… தனுஷின் 50வது படம் எப்படியிருக்கிறது?!
‘’உசுரே நீதானே… நீதானே… நிழலா உன்கூட நானே’’ என உருகி உருகி தங்கையை நேசிக்கும், தங்கையைக் காக்கும் அண்ணனின் கதையே இந்த ‘ராயன்’.
ஓர் இரவில் தாயும், தந்தையும் காணாமல் போக இரண்டு தம்பிகள், ஒரு தங்கை என இந்தக் குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு காத்தவராயன் என்கிற மூத்த அண்ணன் தனுஷிடம் வருகிறது. கைக்குழந்தை தங்கை துர்கா(துஷாரா)வை விற்க விலைபேசும் பூசாரியைக் கொல்ல முதல்முறையாக கத்தியைக் கையில் எடுக்கும் ‘ராயன்’ தங்கை, தம்பிகளோடு சென்னை வந்து சேர்கிறார்.
சென்னையின் ரவுடிகளான துரை என்கிற சரவணணுக்கும், சேது என்கிற எஸ்.ஜே.சூர்யாவுக்கும் 25 ஆண்டுகாலப்பகை. ஆனால், சண்டைபோடாமல் சமாதானமாக இருக்கும் இவர்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டு இரண்டு கும்பலையும் அழித்தொழிக்க வருகிறார் அசிஸ்டென்ட் கமிஷ்னர் பிரகாஷ் ராஜ். போலீஸின் துரை - சேது ஸ்கெட்ச்சுக்குள் தம்பியின் தவறால் வந்து மாட்டிக்கொள்ளும் தனுஷ் அடுத்து என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை!
தனுஷின் முதல் தம்பியாக சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். அபர்ணா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். காளிதாஸ் ஜெயராம் இரண்டாவது தம்பியாக நடிக்க, துஷாரா தங்கையாக நடித்திருக்கிறார். இவர்கள் மூவருக்கும் சரி பாதி காட்சிகளை இயக்குநராகப் பிரித்துக்கொடுத்திருக்கிறார் தனுஷ். இதில் துஷாரா விஜயனே சிறப்பாக ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும், பின்னணி இசையும்தான் படத்துக்குப் பெரிய பலம். அதேப்போல் ஒளிப்பதிவில் தன்னுடைய அத்தனை உழைப்பையும் கொட்டியிருக்கிறார் ஓம் பிரகாஷ். இவர்களுக்கு இணையாகப் பெரும் பாராட்டு போய் சேரவேண்டியது சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்னுக்குத்தான்.
தனுஷ் தனது முரட்டுத் தோற்றத்திலும், அசத்தலான நடிப்பிலும் மிரட்டியிருகிறார். ஆனால், இயக்குநர் தனுஷோ நல்ல கதைக்கு மோசமான திரைக்கதை எழுதியிருக்கிறார். காத்தவராயன் என்கிற பெயருக்கு பதிலாக கத்திக்குத்து ராயன் எனப் பெயர் வைத்திருக்கலாம் எனச் சொல்லும் அளவுக்கு படத்தில் தேவையே இல்லாத அளவுக்கு வன்முறை. பிரகாஷ் ராஜ் தனுஷைப் பார்த்து ‘’30 கொலை பண்ணியிருக்க'’ என அசால்ட்டாகச் சொல்லும் அளவுக்கு கொலைகள் படம் முழுக்க நடந்துகொண்டேயிருக்கிறது.
முதல் பாதி கொஞ்சம் மெதுவாகப் போகிறது என இரண்டாவது பாதிக்குத் தயாரானால் இரண்டாவது பாதையில் எந்தக் காரண காரியமும் இல்லாமல் என்னவெல்லாமோ நடக்கிறது. படத்தில் இசையால் எமோஷனைக் கூட்டியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்காகவாவது திரைக்கதையில் எமோஷனலான நல்ல காட்சிகளை தனுஷ் எழுதியிருக்கலாம்.
பெண்களுக்கு நிகழும் பாலியல் பலாத்காரக் கொடுமையை எதோ கைதட்டல் வாங்குவதற்கான காட்சியாக போகிற போக்கில் வைப்பதெல்லாம் கடும் கண்டனத்துக்குரியது. படம் முழுக்க முழுக்க வன்முறையின் தொகுப்பாக இருக்கிறது.
தனுஷின் இந்த காத்தவராயன் யாரையும் காக்கவில்லை... அழித்தல் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது!