தங்கலான் விமர்சனம்
தங்கலான் விமர்சனம்

தங்கலான் விமர்சனம் : பெண்ணும்,பொன்னும், மண்ணும், சில மர்மமும்… மின்னுகிறதா பா.இரஞ்சித்தின் தங்கலான்?

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் நடித்திருக்கும் 'தங்கலான்' படத்தின் முழுமையான சினிமா விமர்சனம் இங்கே!
Published on

உழைக்கும் மக்களுக்கே நிலமும் அதன் வளமும் சொந்தம் என்கிற ஒன்லைனே ‘தங்கலான்'.

கோலாரில் தங்கம் இருக்கிறது எனத் திப்பு சுல்தான் முதல்கொண்டு பல வெள்ளைக்காரத் துரைகளும் பூர்வக்குடிகளின் நிலத்தை துண்டாட வருகிறார்கள். அப்படி வந்தவர்களை எல்லாம் தெய்வமாக காத்து பேயாக விரட்டியிருக்கிறது ஆரத்தி எனும் காவல் தேவதை. ஆனால், பிரிட்டனில் இருந்து தங்க ஆசையோடு வரும் துரைமார்கள் கோலாரை விடாமல் வேட்டையாட வந்துகொண்டேயிருக்கிறார்கள். அப்படிவரும் துரைதான் கிளமென்ட்.

இதற்கிடையே தான் உண்டு, தன் மக்கள் உண்டு என தனக்குச் சொந்தமான சிறு நிலத்தில் விவசாயம் செய்துவரும் தங்கலானுக்கு, கங்கம்மா என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருக்கிறார்கள். திடீரென ஜமீன்தாரின் சூழ்ச்சியால் நிலம் அவரிடம் இருந்து பிடுங்கப்பட, அடிமை வாழ்வுக்குத் தள்ளப்படுகிறார் தங்கலான்.

இந்த சூழலில் கிளமென்ட் கோலாரில் தங்கம் தோண்ட ஆள் தேவையெனக் கூப்பிட அடிமை வாழ்வைத் துறந்து, உழைப்புக்குத் தகுந்து கூலி கிடைக்கும் என துரையோடு கோலார் நோக்கித் தன் ஊர் மக்களோடு போகிறார் தங்கலான். கோலாரில் தங்கம் கிடைத்ததா, காவல் தேவதை ஆரத்தி தங்கம் தோண்ட வரும் தங்கலானை எப்படி எதிர்கொள்கிறாள், ஆரத்திக்கும் தங்கலானுக்கும் இடையே இருக்கும் பந்தம் என்ன என்பதுதான் ‘தங்கலான்' படத்தின் மொத்தக் கதை. 

தங்கலான்
தங்கலான்

தனது வழக்கமான சினிமா பாணியில் இருந்து விலகி இரண்டரை மணி நேரம் மேஜிக்கல் ரியலிசம் கலந்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். புதுமையான முயற்சிக்காக இயக்குநர் ரஞ்சித்தை நிச்சயம் பாராட்டலாம்.

தங்கலானாக விக்ரம் வாழ்ந்திருக்கிறார். நடையிலும், நடிப்பிலும், பேச்சு வழக்கிலும் விக்ரமின் அபாரமான உழைப்புத் தெரிகிறது. விக்ரமின் மனைவி கங்கம்மாவாக பார்வதி திருவோத்து. ஜாக்கெட்டே அணிந்திராத மனைவிக்கும், ஊர் பெண்களுக்கும் துரையிடம் இருந்து கூலி பெற்ற பணத்தில் தங்கலான் உடுக்க நல்ல உடை வாங்கிவந்து தரும் இந்த ஒற்றைக் காட்சியில் கங்கம்மாவாக நடிப்பில் அதகளம் செய்திருக்கிறார் பார்வதி.

தங்கலான் விமர்சனம்
தங்கலான் விமர்சனம்

சூனியக்காரி ஆரத்தியாக மாளவிகா மோகனன். அவரது நடிப்பில் முன்னோர்களின் வீரமும், மண்ணின் ஈரமும் கலந்தே இருக்கிறது. ஊர் பூசாரியாக நடித்திருக்கும் பசுபதியின் நடிப்பும், உடல் உழைப்பும் பிரமாதம். படத்தில் ஏராளமான நடிகர்கள் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் பொன்னையும், மண்ணையும், பெண்களையும் அவ்வளவு அழகாக, இயல்பாக, எளிமையாகப் படம்பிடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ‘தங்கலான்' படத்துக்குப் பெரும்பலம் சேர்த்திருக்கிறது. செல்வாவின் எடிட்டிங்கிலும் குறை சொல்ல எதுவும் இல்லை. எழுத்தாளர்கள் தமிழ்ப்பிரபா மற்றும் அழகிய பெரியவன் பா.இரஞ்சித்துடன் இணைந்து வசனங்கள் எழுதியிருக்கிறார்கள். வசனங்கள் வட ஆற்காடு பேச்சுவழக்கின் காரணமாகவும், லைவ் டப்பிங் காரணமாகவும் சரியாகப் பிடிபடாமல் போகின்றன. ஆனால், அதையும் மீறி ஆங்காங்கே சில வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன. 

தங்கலான் விமர்சனம்
தங்கலான் விமர்சனம்

பா.இரஞ்சித் - தமிழ்பிரபா திரைக்கதையில் முதல் பாதி சரியாகப் பயணிக்கிறது. ஜமீன்தார்களின் சுரண்டல், பிரிட்டிஷாரின் துரோகம், இந்து ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட பெளத்தம், வலிமையான பெண் கதாபாத்திரங்கள் என பா.இரஞ்சித் படத்தில் எதிர்பார்க்கவேண்டிய அத்தனை அம்சங்களும் படத்தில் இயல்பாகவே இணைந்திருப்பது தங்கலானின் பெரும்பலம். 

ஆனால், இரண்டாம் பாதியில் பார்த்த காட்சிகளே திரும்பத் திரும்ப பார்ப்பதுபோல ஒரு சலிப்பு வருகிறது. பா.இரஞ்சித் படங்களில் மக்களின் வாழ்வியலும், அவர்களின் கொண்டாட்டமும் சிறப்பாக காட்சிப்படுத்தப்படும். ஆனால், ‘தங்கலான்' படத்தில் பெண்களுக்கான உடைக் காட்சியைத்தாண்டி அப்படிப்பட்ட கொண்டாட்டம் படத்தில் எதுவும் இல்லை. ஒரே நிலப்பரப்பில் காட்சிகள் நிகர்வதால் ஒரு சலிப்பு உண்டாவதையும் தவிர்க்க முடியவில்லை. 

குறைகள் இருந்தாலும், புதுமையான முயற்சிக்கும், அபாரமான உழைப்புக்கும், அட்டகாசமான நடிப்புக்காகவும் நிச்சயம் ‘தங்கலான்' படத்தை வெள்ளித்திரையில் பார்க்கலாம்!

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com