'' 'கூலி' படத்துக்கான ஒட்டுமொத்த உழைப்பும் வீணாய் போய்விட்டது'' - லோகேஷ் கனகராஜ்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் படம் 'கூலி'. இதன் படப்பிடிப்பு இரண்டு மாதங்களாக ஐதராபாத்தில் நடந்துவருகிறது. இந்தப் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி இணையத்தில் லீக் ஆகியிருக்கிறது.
‘கூலி' படத்தில் நாகார்ஜுனா சைமன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இவர் 'கூலி' படத்தில் நடித்திருக்கும் சண்டைக் காட்சிகள்தான் இன்று இணையத்தில் வெளியாகி வைரலானது. படப்பிடிப்பில் யாரோ திருட்டுத்தனமாக பதிவு செய்து இந்த வீடியோவை வெளியிட திரையுலகமே அதிர்ந்துபோனது.
இதற்கிடையே படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘’ஒரு வீடியோவால் பலரின் இரண்டு மாத உழைப்பும் வீணாய் போய்விட்டது. சினிமாவின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி’’ என்று பதிவு செய்திருக்கிறார்.
இந்த வீடியோ வெளியாகிவிட்டதால் இந்த சண்டைக்காட்சி முற்றிலுமாக படத்தில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் இந்த சண்டைக்காட்சி வேறு விதமாக படமாக்கப்படும் எனத் தெரிகிறது.