டெல்லி கணேஷ் : காமெடியன், வில்லன், பாலக்காட்டுத் தமிழ் அப்பா… சாதாரணங்களின் அசாதாரணம்!
டெல்லி கணேஷ் என்றதுமே எனக்கு முதலில் நினைவிற்கு வருவது ‘அய்யோ... அம்மா... அம்மம்மா’ என்கிற மேடை நாடகம்தான். கிரேசி மோகன் எழுதியது. பல முறை மேடையேற்றப்பட்டு பிறகு டிவியிலும் வந்து ‘ஹிட்’ ஆன டிராமா இது. இதில் ஹீரோ காத்தாடி ராமமூர்த்தி. அவருடைய நண்பராக கைலாசம் என்கிற பாத்திரத்தில் நடித்த டெல்லி கணேஷ், காத்தாடிக்கு இணையாக காமெடியில் வசனம் பேசி அசத்தியிருந்தார். ஆம், டெல்லி கணேஷ் ஒரு நாடக நடிகரும் கூட என்பது 2கே கிட்ஸ்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அறுபதுகளில் இந்தியன் ஏர் ஃபோர்ஸில் பணியாற்றிக் கொண்டிருந்தார், கணேஷ் . அங்கிருந்த நாடகக்குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர், பிறகு காத்தாடி ராமமூர்த்தியின் குழுவில் இணைந்தார். ‘டெளரி கல்யாணம்’ என்கிற நாடகத்தில் கணேஷ் ஏற்ற பாத்திரத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் பாலசந்தர், ‘பட்டினப் பிரவேசம்’ (1976) என்கிற திரைப்படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். அந்தச் சமயத்தில் திரையுலகில் பல ‘கணேஷ்கள்’ இருந்ததாலும் இவர் டெல்லியில் பணிபுரிந்ததாலும் ஊர்ப்பெயரை முன்னால் ஒட்ட வைத்து ‘டெல்லி கணேஷ்’ என்று பாலசந்தர் பெயர் சூட்டினார். ராசியான கையினால் வைத்த அந்தப் பெயர் நிலைத்துப் போயிற்று.
துணைக் கதாபாத்திரங்களின் நாயகன் - டெல்லி கணேஷ்
டெல்லி கணேஷ் ஹீரோவாக சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கும். ‘தணியாத தாகம்’, ‘எங்கம்மா மகாராணி’ போன்ற படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். என்றாலும் அவரது பிரதான அடையாளம் ‘கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்’ என்பதுதான்.
கேரக்டர் ரோல்களில் நடிப்பவர்களுக்கு ஒரு பெரிய சௌகரியம் இருக்கிறது. ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்றால் அதைத் தாண்டி அவர்களால் அதிகம் வெளியே வர முடியாது. ஆனால் துணைக்கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள், காமெடி, வில்லத்தனம், குணச்சித்திரம் என்று வெவ்வெறு விதமான பாத்திரங்களில் நடிக்க முடியும். விதவிதமான பாத்திரங்களில் கூடுபாய்ந்து நடிப்பிற்கேற்ற தீனியை அடைய முடியும். அந்த வரிசையில் ஒரு முக்கியமான கேரக்டர் ஆர்டிஸ்ட், டெல்லி கணேஷ்.
கமல், ரஜினி ஆரம்பித்து அதற்கு அடுத்தடுத்த பல தலைமுறைகளைச் சேர்ந்த இளம் நடிகர்களுடனும் நடித்துத் தீர்த்து விட்டார் கணேஷ். கடைசியாக நடித்த இந்தியன்- 2 திரைப்படம் வரையிலும் ஆக்டிவாக இருந்தார். எண்பதாவது வயதிலும் ஒருவர் துடிப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது ஆச்சரியமான விஷயம்.
காமெடியன், வில்லன், பாலக்காட்டுத் தமிழ் அப்பா!
தமிழில் இவரைச் சிறப்பாக பயன்படுத்தியவர்கள் என்று பாலசந்தர், கமல்ஹாசன், விசு போன்றவர்களைச் சொல்லலாம். ‘அச்சமில்லை, அச்சமில்லை’ திரைப்படத்தில் கெட்ட அரசியல்வாதியாக இருக்கும் தன் மகனைக் கண்டித்து அவமானப்படும் பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் அற்பத்தனமான அப்பா பாத்திரத்தில் பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்திருப்பார்.
‘சிந்து பைரவி’ படத்தில் குடிப்பழக்கம் உள்ள மிருதங்க வித்வான் ‘குருமூர்த்தியாக’ டெல்லி கணேஷ் அசத்தியதை எவரால் மறக்க முடியும்? பாலசந்தரின் படங்களில் இப்படி விதவிதமான பாத்திரங்கள் என்றால் இவரை இன்னமும் சிறப்பாக பயன்படுத்தியவர் என்று கமலைச் சொல்லலாம். இந்த இருவரின் கூட்டணியில் வந்த படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றன. ‘ஹேராம்’ படத்தில் மதவெறி கொண்ட பாத்திரத்தில் டெல்லி கணேஷ் அசத்தியிருப்பார். அதன் எதிர்முனையில் ‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் முதலாளிக்கு ஜால்ரா போட்டு ஏமாற்றும் மேனேஜர் பாத்திரத்தை மறக்கவே முடியாது.
அசட்டுத்தனமான பாத்திரங்களை திறம்பட கையாண்ட டெல்லி கணேஷை ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் வில்லனாக்கி அழகு பார்த்தார் கமல். பாலக்காட்டு தமிழ் பேசி, ‘காமேஸ்வரனின்’ தந்தை பாலக்காட்டு மணி அய்யராக ‘மைக்கேல் மதன காமராஜனில்’ டெல்லி கணேஷின் நடிப்பை அத்தனை எளிதில் மறக்க முடியாது.
மணிரத்னத்தின் நாயகன் - “நாயக்கரே.. போலீஸ்காரங்க எவ்வளவோ அடிச்சாங்க.. நான் சொல்லலையே.. நீங்க நல்லா இருக்கணும்… நாயக்கரே... நான் இருந்து என்ன பண்ணப் போறேன்” என்று கையை உதறி உருக்கமாக இவர் வசனம் பேசி நடித்த காட்சியை ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. “அய்யிரே... வாங்கறோம்... நாலு ஆம்புலன்ஸ் வாங்கறோம்” என்று வேலு நாயக்கர் சொன்னவுடன் “நாலுன்னா... “ என்று மிடில் கிளாஸ்தனமாக யோசித்து காற்றில் கணக்கு போட ஆரம்பித்து விடுவார். “வாங்கறோம்” என்று நாயக்கர் அழுத்தமாகச் சொன்னவுடன் கப்சிப்பென்று தலையை ஆட்டுவார்.
மாற்றுத் திரைப்படங்களில் நடித்து வாங்கிய விருதுகள்!
விசுவின் திரைப்படங்களிலும் டெல்லி கணேஷ் ஏராளமாக நடித்திருக்கிறார். ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தில் பெண்ணின் தந்தையாக, சம்பந்தியாக இயல்பான நடிப்பைத் தந்திருப்பார். அதைப் போலவே ‘டெளரி கல்யாணம்’ என்னும் திரைப்படத்தில் திருமண வீடுகளில் வேலை செய்து சாப்பிடும் பாத்திரத்தை அற்புதமாக கையாண்டிருப்பார்.
ஜனரஞ்சகமான திரைப்படங்கள் மட்டுமல்லாது ‘பசி’, ‘குடிசை’ போன்ற மாற்று முயற்சிகளிலும் நடித்து விருது வாங்கியுள்ளார். 1976-ல் துவங்கிய இவரது திரைப்பயணம் இறுதி வரையிலும் தளராமல் தொடர்ந்து கொண்டிருந்தது.
பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கும் கணேசன், ‘நவரசா’ என்னும் ஆந்தலாஜி தொடரில் (2021) வசந்த் இயக்கத்தில் ‘பாயசம்’ என்னும் குறும்படத்தில் நடித்திருந்தார். தி.ஜானகிராமன் எழுதிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் குறும்படத்தில், சகோதரனின் மீது வன்மத்தையும் பொறாமையையும் மறைமுகமாகக் காட்டும் அருவருப்பான பாத்திரத்தில் சிறந்த நடிப்பைத் தந்திருந்தார். இதைப் போலவே மணிகண்டன் இயக்கிய ‘நரையெழுதும் சுயசரிதம்’ என்னும் திரைப்படத்தில் தோல்வியடைந்த இளைஞனுக்கு ஊக்கம் தரும் பெரியவர் பாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்களின் முக்கியத்துவம்!
மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழிகளில் நடித்துள்ள டெல்லி கணேஷ், டப்பிங் ஆர்ஸ்டிஸ்ட்டாகவும் சில படங்களில் குரல் தந்துள்ளார். திரைப்படங்கள், நாடகங்கள், சீரியல்களைத் தாண்டி நடைமுறை வாழ்க்கையிலும் அபாரமான நகைச்சுவையுணர்வு கொண்ட மனிதராக டெல்லி கணேஷ் இருந்திருக்கிறார். ஹியூமர் கிளப்பில் தன்னுடைய மாமனார் மாதிரி இவர் பேசிக் காட்டியதையும் அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதும் சுவாரசியமான பகிர்வு. பாலக்காட்டுத் தமிழ் பேசும் மாமனாரிடமிருந்து இன்ஸ்பயர் ஆனதுதான், ‘மைக்கேல் மதன காமராஜன்’ பாத்திரம்.
ஒரு திரைப்படத்திற்கு பிரதான பாத்திரங்களைத் தாண்டி அடிப்படையான சுவாரசியத்தையும் கட்டுமானத்தையும் தருவது துணைக் கதாபாத்திரங்களே. இப்படி ‘supporting actors’ களாக நடிப்பவர்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று டெல்லி கணேஷ் வருத்தப்பட்டு மேடையில் பேசியதை பலரும் வரவேற்றனர்.
நாடகம், சினிமா என்று பல்வேறு பாத்திரங்களை சுவாரசியமான முறையில் கையாண்டு திறமையான நடிகராக விளங்கி, இறுதி வரைக்கும் தனக்குப் பிடித்தமான நடிப்பை விடாமல் இயங்கிய டெல்லி கணேஷ் சமீபத்தில் மறைந்தது தமிழ் சினிமாவிற்கும் ரசிகர்களுக்கும் பேரிழப்பு!