ஐஸ்வர்யாவுக்கு தனுஷ் கொடுத்த ஹார்ட்டீன்… பிரிந்தவர்கள் மீண்டும் இணைகிறார்களா?!
நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2022-ம் ஆண்டு தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு இருவரும் தனித்தனியாக வாழ்ந்துவருகிறார்கள். மகன்கள் இருவரும் சில நாட்கள் தாயுடனும், சில நாட்கள் தந்தையுடனும் வசித்துவருகிறார்கள். சமூக வலைதளங்களில் பிரிவை அறிவித்த இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு அதாவது இந்த ஆண்டு ஏப்ரலில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள். விவாகரத்து வழக்கு தற்போது நிலுவையில் இருக்கிறது.
இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐஸ்வர்யாவின் இஸ்டாகிராம் பக்கமே வராத தனுஷ், தற்போது ஐஸ்வர்யா தனுஷின் போஸ்ட்டுகளுக்கு ஹார்ட்டின் கொடுத்திருக்கிறார். இதனால் இருவரும் மீண்டும் இணையப்போகிறார்கள் என மகிழ்கிறார்கள் தனுஷின் ரசிகர்கள்.
ஐஸ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகன்களுடன் இருக்கும் போட்டோவைப் பகிர்ந்திருந்தார். ‘’மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என எழுதி மகன்களுடன் செலவழித்த விடுமுறை போட்டோக்களை பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. இதற்கு தனுஷ் ஹார்ட்டின் கொடுத்திருந்தார்.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு ‘’இன்று ஓணம் கொண்டாடும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்… செளந்தர்யாவின்(தங்கை) அருமையான மதிய உணவிற்கு நன்றி.. ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்கும் மகிழ்ச்சி'’ என தலைப்பிட்டு ஓணம் பண்டிகை அன்று போட்டோ பகிர்ந்திருந்தார். இதற்கும் தனுஷ் ஹார்ட்டின் கொடுத்திருக்கிறார். இதை வைத்துதான் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேரப்போகிறார்கள் என்கிற செய்தி உலவ ஆரம்பித்திருக்கிறது.
இதுகுறித்து தனுஷ், ஐஸ்வர்யா வட்டாரத்தில் விசாரித்தோம். ‘’இருவரும் விவாகரத்து பெறும் சூழலில் இருந்தாலும் இருவரும் மகன்கள் தொடர்பாக அடிக்கடி பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இது பரஸ்பர பிரிவுதான். அதனால் அவர்கள் பேசுவதிலோ, சமூக வலைதள போஸ்ட்டுகளுக்கு லைக் போடுவதிலோ எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், இருவரும் சேரப்போகிறார்களா என்பதற்கு எங்களிடம் எந்த பதிலும் இல்லை. இது இருவரின் தனிப்பட்ட முடிவு’’ என்கிறார்கள்.