வெங்கடேச பிரபு எனும் நான்… அடங்காத அசுரன் வளர்ந்த கதை! HBD Dhanush
2002-ம் ஆண்டு… கெச்சலான தேகம், பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றத்துடன் விடலைப் பையனாக தனுஷ் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நாள் இன்றும் நினைவில் இருக்கிறது. தொண்ணூறுகளில் வெங்கடேச பிரபு என்கிற அந்தச் சிறுவன் தன் தந்தை இயக்கும் படங்களின் ஷூட்டிங்கை வேடிக்கை பார்ப்பதற்காக ஸ்பாட்டுக்கு செல்வதுண்டாம். தந்தையின் ‘ஆக்ஷன், ‘கட்’ வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ கோலிவுட்டின் முன்னணி நாயகனாக, நடிப்பு அசுரனாக அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறார் தனுஷ்.
இரண்டாவது படமும் அண்ணன் செல்வராகவனோடு ‘காதல் கொண்டேன்’. "தொட்டு தொட்டு போகும் தென்றல்" பாடலில் ரப்பர் பந்து துள்ளி எழுவதை போன்று தனுஷ் ஆடிய ஆட்டத்துக்கு தியேட்டரே ஆர்ப்பரித்தது ஃப்ளாஷில் வந்துபோகிறது.
ரஜினிக்குப் பிறகு அழகு என்னும் இலக்கணத்தை உடைத்த பெருமை நம் ஹீரோவையே சேரும். ‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘திருடா திருடி' என முதல் மூன்று படங்களுமே பெரிய ஹிட்டாகி ஹாட்ரிக் வெற்றியோடு பயணத்தை தொடங்கியவர் தனுஷ்.
செல்வராகவன் தனுஷுக்கு அடையாளம் தந்தவர் என்றால், இயக்குநர் வெற்றிமாறன் தனுஷுக்குள் இருந்த நடிப்பு அசுரனை வெளியே கொண்டுவந்தவர். செல்வராகவன் தனது இயக்கத்தில் தனுஷின் திறமைகளை வெளிப்படுத்த, வெற்றிமாறன் தனது திரைப்படங்களில் தனுஷின் ஆழமான நடிப்பை காட்சிப்படுத்தினார். இதன்மூலம் தனுஷுக்கு தமிழ் சினிமாவில் ஒரு வலுவான அடித்தளம் அமைந்தது. அதற்கு உதாரணம்தான் ‘ஆடுகளம்’, ‘அசுரன்'.
‘பவர் பாண்டி’ திரைப்படத்தின் மூலம் தனது இயக்குநர் திறமையையும் வெளிப்படுத்தினார் தனுஷ். தனது வயதுக்கு மீறிய ஒரு கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதை மிகச்சிறப்பாகவே இயக்கியிருந்தார். தயாரிப்பாளராக ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ போன்ற படங்களையும் தமிழ் சினிமா உலகுக்குத் தந்திருக்கிறார் தனுஷ்.
2002-ல் தொடங்கிய தனுஷின் பயணம் 22 ஆண்டுகளைக் கடந்து தொட்டதெல்லாம் பொன்னாக, பல விருதுகளையும் மனங்களையும் வென்று குவித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரனாக உயர்ந்து நிற்கும் தனுஷுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!