''ரஜினிகாந்த், ஜெயலலிதா இருக்கும் போயஸ் கார்டன்ல வீடு வாங்க 20 வருஷம் உழைச்சிருக்கேன்'' - தனுஷ்
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு லைவாகவும் பர்ஃபாமென்ஸ் செய்ய, தனுஷும் அவரோடு சேர்ந்து பாடினார்.
படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர். 'ராயன்' ஜூலை 26-ம் தேதி ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் படத்துக்கு 'ஏ' சென்சார் கிடைத்திருக்கிறது.
விழாவில் பேசிய தனுஷ் ‘’50 படங்கள் நான் நடிப்பேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எல்லா நன்றிகளும் இயக்குநர் செல்வராகவனுக்கே. அவர் மட்டும் என்னை ஒரு நடிகராகப் பார்க்கவில்லை, எனக்கு ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடிக்க வாய்ப்புத்தரவில்லை என்றால் இந்த தனுஷ் இல்லை. ஆங்கிலம் சரியாகப் பேசத்தெரியாதவன் நான். ஆனால், இப்போது ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் ரசிகர்கள் கொடுத்த உற்சாகமும், அன்பும்தான்.
என்னைப் பற்றி எனக்குத் தெரியும்… என்னைப் படைத்த ஆண்டவனுக்கு தெரியும். என் பெற்றோருக்கு தெரியும். என் ரசிகர்களாகிய உங்களுக்கும் தெரியும். நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். எனக்கு 16 வயதிருக்கும் போது ஒரு நாள் ரஜினி சாரின் வீட்டை பார்க்க போயஸ் கார்டனுக்குப் போனேன். அப்போது அங்கிருந்த செக்யூரிட்டியிடம் ரஜினி சார் வீட்டுக்குள்ள போய் அவரைப் பார்க்கணும்னு கேட்டேன். ஆனா, முடியல. பக்க்ததுல இன்னொரு வீட்டுலயும் கூட்டமா இருந்தது. அதைப் பார்த்துவிட்டு 'அது யார் வீடு'னு என்னுடன் வந்தவரிடம் கேட்டேன். அது அம்மா ஜெயலலிதா அவர்களுடைய வீடு என்று அவர் சொன்னார். அவர்களது வீட்டையும் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அப்போது என்னுடைய மனதில் போயஸ் கார்டனில், ஒரு சின்ன வீடாவது கட்ட வேண்டும் என்ற ஆசை உருவானது. அந்த 16 வயசு பையன் வெங்கடேஷ் பிரபு ஆசைப்பட்டத இந்த தனுஷ் 20 வருஷம் உழைச்சு கொடுத்த கிஃப்ட்தான் அந்த போயஸ் கார்டன் வீடு" என்று பேசியிருக்கிறார் தனுஷ்