நடுரோட்டில் சண்டை போட்ட இயக்குநர் சேரன்; கிளம்பிய சர்ச்சை!
‘பொற்காலம்’, ‘ஆட்டோகிராஃப்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் சேரன். இடையில் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இப்போது மீண்டும் படங்கள் இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். இப்படியான சூழ்நிலையில்தான் நடுரோட்டில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவரிடம் சண்டை போட்டு பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார் சேரன்.
அதாவது, இன்று காலை சென்னையில் இருந்து பாண்டிச்சேரி கிளம்பி இருக்கிறார் சேரன். அப்போது கண்ணாங்குப்பம் என்ற பகுதியில் அவரது கார் போய்க் கொண்டிருந்தபோது, பின்னால் ஒரு தனியார் பேருந்து விடாமல் ஹாரன் அடித்தபடி வந்திருக்கிறது.
இதனால், எரிச்சலடைந்த சேரன் காரை விட்டு இறங்கி அந்த பேருந்து ஓட்டுநரிடம் சண்டைக்கு சென்றிருக்கிறார். "சாலையில் ஒதுங்க இடம் இல்லாதபோது இப்படி விடாமல் ஹாரன் அடிக்கக் கூடாது! அந்த உரிமையை உனக்கு யார் கொடுத்தார்கள்?'’ எனக் கேள்வி எழுப்பி சண்டைப் போட்டிருக்கிறார். பதிலுக்கு அந்த பேருந்து ஓட்டுநரும் சண்டை போட அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயம் இணையத்தில் வைரலாக கடலூர் எஸ்.பி. ராஜாராம், அந்தப் பகுதி காவல்துறையினரிடம் விசாரித்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து சேரன் காவல்துறையினரிடம் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.