இயக்குநர் தனுஷின் நான்காவது படம்... மீண்டும் ஒரு மல்ட்டி ஸ்டாரர்... டைட்டில் என்ன தெரியுமா?!
தனுஷ் தற்போது வெறும் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் சேர்ந்தே பயணிக்க விரும்புகிறார். இந்தாண்டு அவரது நடிப்பு, இயக்கத்தில் ராயன் வெளியான நிலையில் அடுத்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீஸாகிறது. இதனைத்தொடர்ந்து இயக்குநராகத் தனது நான்காவது படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் தனுஷ்.
இந்தப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் ஷூட்டிங் தனுஷின் சொந்த ஊரான தேனியில் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. இந்தப்படத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ தனுஷுடன் ஜோடியாக நடித்துப் புகழ்பெற்ற நித்யா மேனன் மீண்டும் நடிக்க இருக்கிறார்.
மல்ட்டி ஸ்டாரரான இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் அருண் விஜய் தனுஷுடன் இணைந்து நடிக்கிறார்கள். தனுஷ் இயக்கிய முதல் படமான ‘ப.பாண்டி’யில் ஹீரோவாக நடித்த ராஜ்கிரண் மற்றும் சத்யராஜ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கயிருக்கிறார்கள்.
படத்துக்கு 'இட்லிகடை' என டைட்டில் வைத்திருக்கிறார் தனுஷ். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.