ரஜினியின் வெற்றிக்கு மூன்றே மந்திரங்கள்தான் காரணம் : 'வேட்டையன்' இயக்குநர் ஞானவேல்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், இசையமைப்பாளர் அனிருத் எனப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் ஞானவேல் நடிகர் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். '' 'வேட்டையன்’ படம் கிடைக்க முக்கிய காரணம் நடிகர் சூர்யாதான். அவரால்தான் நான் இந்த மேடையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். அவருக்கு நன்றி. ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ரஜினியின் ஒவ்வொரு படமும் ஸ்டைலும் பிடிக்கும். எனக்கு அதுபோல, ‘படையப்பா’ படத்தில் வரும் ஊஞ்சல் சீன் மிகவும் பிடிக்கும். அதை மனதில் வைத்துதான் ’வேட்டையன்’ படத்துக்கு திரைக்கதை எழுதினேன்.
எல்லா தலைவர்களுக்கும் சரியான தொண்டர்கள் கிடைப்பார்கள். ஆனால் எல்லா தொண்டர்களுக்கும் சரியான தலைவன் கிடைப்பதில்லை. அப்படி சரியான தலைவனாக கிடைத்து இருப்பவர் தான் ரஜினிகாந்த். எப்போதும் அவர் முதல் இடத்தில் இருப்பதற்கு ‘அட்ஜஸ்ட், அக்காமடேட், அடாப்ட்’ என்கிற இந்த மூன்று விஷயங்களும்தான் காரணம்.
தயாரிப்பாளர் போட்ட பணத்தை எடுக்க வேண்டும். அதே சமயம் ரசிகர்களும் படத்தை விரும்ப வேண்டும் என்ற விஷயத்தை என்னிடம் சொல்லிக் கொண்டே இருந்தார். அவருக்கு தெரிந்த ரசிகர்களை விட தெரியாத ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றனர். அதில் நானும் ஒருவன்.
ரஜினி வருவதற்கு முன்பு அமிதாப் பச்சன் எப்போதும் செட்டில் இருப்பார். அவருக்கு முன்பாக நான் இருக்க வேண்டும் என ரஜினி சொல்லியிருந்தார். ஆனால், அதை என்னால் செய்யவே முடியவில்லை. இரண்டு சூப்பர் ஸ்டார்களின் அர்ப்பணிப்பும் வியக்க வைக்கிறது. தமிழ் சினிமாவில் ஒருவர் நல்ல திரைப்படம் எடுத்தால், ரஜினிகாந்த் அவரை நேரில் அழைத்து பாராட்டுவார். ‘ஜெய்பீம்’ படம் ரிலீஸ் ஆன நாளிலிருந்தே நான் அவரது அழைப்புக்காக காத்திருந்தேன்.
அவரை சந்திப்பதற்காகவே புதிய சட்டை ஒன்றை வாங்கி அணிந்து சென்றேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு செளந்தர்யா ரஜினிகாந்த், என்னிடம் ''அப்பாவுக்கு கதை இருக்கிறதா?'' எனக் கேட்டார். அந்த சமயம் என்னிடம் இரண்டு கதைகள் இருந்தது. அதில் எனக்குப் பிடித்த கதைதான் ரஜினிக்கும் பிடித்திருந்தது. ‘வேட்டையன்’ உருவானது” என்றார் ஞானவேல்.