பட்டாசு விபத்தில் 4 பேர் உயிரிழப்பு... நிதியுதவி செய்த இயக்குநர் மாரி செல்வராஜ்!
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள குறிப்பன்குளம் கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசர்குளத்தை சேர்ந்த முத்து கண்ணன்(21), நாசரேத்தை சேர்ந்த விஜய் (25), புளியங்குளத்தை சேர்ந்த செல்வம் (26), ஆழ்வார்திருநகரி அருகே உள்ள செம்பூரை சேர்ந்த பிரசாந்த் (26) ஆகிய நான்கு பேரும் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
வெடி விபத்தில் உயிரிழந்த அரசர்குளத்தைச் சேர்ந்த முத்துக்கண்ணன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் நேரில் வருகை தந்தார்.
'' ’வாழை’ படம் வெளியான நிலையில் இருந்ததால் விபத்து நடந்த சமயத்தில் வர இயலவில்லை'' என்று வருத்தம் தெரிவித்த மாரி செல்வராஜ், முத்துக்கண்ணனின் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த ஓலை குடிசையில் முத்துக்கண்ணனின் தந்தையுடன் அமர்ந்து குடும்ப நிலையை கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து வீட்டிற்குள் சென்று வீட்டை பார்வையிட்ட அவர் முத்துக்கண்ணன் குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து விபத்தில் பலியான மற்ற மூவரின் வீடுகளுக்கும் சென்று ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்.