''ரஞ்சித்த மேல வர சொல்லு''... அன்போடு அழைத்த திருமாவளன், ஓடி வந்த பா.இரஞ்சித், கட்டியணைத்த மாரி!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ராம் நேற்று தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு உள்பட இயக்குநர்கள் பா.இரஞ்சித், மிஷ்கின் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர், முனைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.
திருமாவளவன் மேடை ஏறி இயக்குநர் ராமுக்கு மலர் கொத்து மற்றும் புத்தகம் ஒன்றை பரிசளித்து பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். அதே மேடையில் திருமாவளவன் மாரி செல்வராஜிடம் ''இரஞ்சித்த வர சொல்லு'' என்று சொல்ல, பா.இரஞ்சித்தை அழைத்தார் மாரி. உடனே மேடைக்கு ஓடி வந்த பா.இரஞ்சித், திருமாவளவனின் கையைப் பிடித்து கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். இவர்களுடன் இயக்குனர் ராம் மற்றும் மாரி செல்வராஜ் மேடையை பகிர்ந்து கொண்டார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு ஆம்ஸ்ட்ராங் படுகொலையை ஒட்டி பா.இரஞ்சித் நடத்திய நீதி கேட்கும் பேரணியில் திருமாவளவன் பங்கேற்காததை குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அது சம்பந்தமாக நீதி கேட்கும் பேரணியில் பா.இரஞ்சித், திருமாவளவன் குறித்து பேசியிருந்தார். பா.இரஞ்சித்தின் அந்த பேச்சு பலரும் விமர்சனம் செய்யும்படி அமைந்தது. இரஞ்சித்துக்கும் திருமாவளவனுக்கும் இடையே மோதல் ஏற்படுவது போல் சிலர் சித்தரித்தனர்.
இந்நிலையில்தான் ராமின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் அரங்கேறிய இந்த நெகிழ்ச்சியான தருணம் இருவரிடையேயும் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை என்பதை வெளிக்காட்டியிருக்கிறது. முன்பு பேட்டி ஒன்றில் திருமாவளவன் பா.இரஞ்சித்தையும், மாரி செல்வராஜையும் தனது இரு மகன்கள் என்று குறிப்பிட்டு பேசியது இந்த நெகிழ்ச்சியான தருணத்தின்போது நினைவுக்கு வருகிறது.