''அஜித் சொன்னதை விஜய்யோட ‘GOAT' படத்துல செஞ்சிருக்கேன்'' - இயக்குநர் வெங்கட்பிரபு
இயக்குநர் வெங்கட்பிரபு ‘GOAT’ படத்தினை அடுத்த மாதம் வெளியிட இருக்கிறார். இதற்காக, படத்துக்கான புரோமோஷன் வேலைகளைத் தீவிரமாகத் தொடங்கி இருக்கிறார். யுவன் இசையில் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘GOAT’ படத்தின் கதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
அதில் ‘ரா’ அமைப்பு ஒன்றில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் செய்த காரியம் ஒன்று பின்னாளில் அவர்களுக்கு எவ்வளவு பெரிய தொல்லையாக மாறியது, அதை அவர்கள் எப்படிக் கையாண்டார்கள் என்பதுதான் கதை என சொல்லி இருக்கிறார். அதேபோல, ‘GOAT’ படம் பற்றி அஜித் சொன்னதையும் அந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.
''அஜித் சாருடன் ‘மங்காத்தா’ படம் செய்து கொண்டிருக்கும் போதே அவர் விஜய் சாரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என சொன்னார். ‘GOAT’ படம் பற்றிய அறிவிப்பு வந்ததும் அவர் என்னிடம், ' ‘மங்காத்தா’ படத்தை விட 100 மடங்கு சிறப்பாக இந்தப் படத்தை எடுத்துக் கொடு’ என்று சொன்னார். அவர் சொன்னதை நான் செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இதற்கு மேல் ரசிகர்கள்தான் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு எத்தனை மடங்கு சிறப்பாக எடுத்திருக்கிறேன் என சொல்ல வேண்டும். நிச்சயம் விஜய் ரசிகர்களுக்குப் பல சர்ப்ரைஸ் படத்தில் இருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு!