நிவின் பாலி மீதான பாலியல் புகார் பொய்யா... ஆதாரங்களை வெளியிட்ட இயக்குநர்கள்!
நடிகர் நிவின் பாலி மீது 40 வயது பெண் துபாயில் வைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், குற்றம் நடந்ததாகச் சொல்லப்படும் நாளில் நடிகர் நிவின் பாலி கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தது தற்போது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. இதனால் இந்த புகாரின் உண்மைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
மலையாள இயக்குநர்கள் வினித் ஸ்ரீனிவாசன் மற்றும் அருண் ஆகியோர் இது தொடர்பாக ஆவணங்களுடன் நிவின் பாலி படப்பிடிப்பில் இருந்தார் என சாட்சியம் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டதாக கூறும் பெண் நிவின் பாலி மீது அளித்திருக்கும் புகாரில், பாலியல் பலாத்காரம் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி மற்றும் 15-ம் தேதிகளில் துபாயில் வைத்து நடந்தாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், குறிப்பிட்ட அந்த இரண்டு நாட்களுமே நிவின் பாலி வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கொச்சியில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்ற்றுளார். டிசம்பர் 15-ம் தேதிய மதியவாக்கில் 'ஃபார்மா' என்ற இணையத் தொடரின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் என அதன் இயக்குநர் அருணும் சாட்சி அளித்திருக்கிறார். புகார் கூறப்பட்ட அன்றே நிவின் பாலி செய்தியாளர்களைச் சந்தித்து இந்த புகார்களைத் திட்டவட்டமாக மறுத்ததோடு, இந்தப் புகார் பொய்யானது என்பதை நிரூபிக்க அதன் எல்லைவரை செல்வேன். இதற்குப் பின்னால் இருப்பவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவேன் எனச்சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. நிவின் பாலி விவகாரம் கேரளாவில் நடந்துவரும் பாலியல் சர்ச்சைகளின் திசையை வேறுபக்கம் திருப்பியிருக்கிறது. ஹேமா கமிட்டி அறிக்கைப்பின்னர் சில பெண்கள் இதை தங்கள் சுயலாபத்துக்காகப் பயன்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.