மாற்றுத்திறனாளி சிறுவனின் நம்பிக்கையை சிதைத்த விஜய்... மனமுடைந்த குடும்பம்!
நடிகர் விஜய்க்கு ஆறில் இருந்து அறுபது வரை பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அதிகளவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ரசிகர்களாக இருக்கின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை. ’GOAT' படத்திற்காக நடிகர் விஜய் திருவனந்தபுரம் சென்றபோது அங்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்ட சிறுவனை சந்தித்திருக்கிறார். விஜய் ரசிகனான அந்த சிறுவன் அவரைப் பார்த்ததும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியிருக்கிறது.
நடிகர் விஜயைப் பார்த்த உற்சாகத்தில் அந்த சிறுவனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் பல லட்ச ரூபாய் செலவு செய்தும் நடக்காத அதிசயம் விஜயை பார்த்த பிறகு நடந்திருப்பதாகவும் அதற்காக மீண்டும் சென்னையில் விஜயைப் பார்க்க வந்திருக்கிறார்கள் அந்த சிறுவனின் பெற்றோர்.
சிறுவனோடு விஜய் வீட்டின் முன்பே கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்திருக்கிறார்கள். விஜயின் காரைப் பார்த்ததும் அந்த சிறுவன் உற்சாகமடைந்திருக்கிறான். வீல் சேரை விட்டு எழுந்திருக்கவும் முயன்றிருக்கிறான். ஆனால், நடிகர் விஜய்யோ தன் காரை ஒரு நிமிடம் கூட நிறுத்தாமல் அவரது வீட்டுக்குள் சென்றிருக்கிறார். இந்த விஷயம் வருத்தமளிப்பதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.