வேலூர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் துரை தயாநிதி!
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி. இவர் ‘வாரணம் ஆயிரம்’, ’மங்காத்தா’ உள்ளிட்டப் பல படங்களைத் தயாரித்துள்ளார். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர் சென்னை, அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது மூளையில் உள்ள ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் அனுமதித்தனர்.
அவரது உடல்நலன் குறித்து தெரிந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் இரண்டு முறை மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவரது உடலில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக, இன்று அவர் வேலூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு அளிக்கப்பட்ட பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளால் அவர் எழுந்து நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.