ஃபகத் ஃபாசில் பிறந்தநாள்... ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்த ‘வேட்டையன்’, ‘புஷ்பா2’ படக்குழு!
ரசிகர்களால் செல்லமாக 'FAFA’ என்று அழைக்கப்படும் மலையாள சினிமாவின் நடிப்பு ராட்சசன் ஃபகத் ஃபாசிலுக்கு இன்று 42-வது பிறந்தநாள். ரசிகர்களும் திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துச் சொல்லி வருகின்றனர். இந்த வருடம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்களான ரஜினியின் ‘வேட்டையன்’ மற்றும் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.
ஃபகத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லி ‘வேட்டையன்’ படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஃபகத் ஃபாசில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சனுடன் இருக்கிறார். சிரித்த முகத்தோடு ஃபகத் ஃபாசில் நடுவில் கைக்கட்டி நிற்க அவரது தோள் மீது கைவைத்து இருபுறமும் அமிதாப் மற்றும் ரஜினி மிரட்டலான தோரணையில் நிற்கிறார்கள். அதேபோல, ’புஷ்பா2’ படக்குழுவினரும் பகத் இருக்கும் மாஸான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தங்கள் வாழ்த்துகளைக் கூறியிருக்கிறார்கள். இந்த போஸ்டர்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாய் பகிர்ந்து வருகின்றனர்.