நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் இசை நிகழ்ச்சியில் அடிதடி... இளைஞர்களால் நேர்ந்த பரபரப்பு!
தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு இசை நிகழ்ச்சிகளை நடத்துவதை இசையமைப்பாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த வகையில் நடிகர்- இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தனது சொந்த ஊரான கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நேற்று இசை நிகழ்ச்சி நடத்தினார். இதில் ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட பல பாடகர்கள் நிகழ்ச்சியில் பாடி கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்தனர். இந்த நிலையில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்கள் அங்கு நடனமாடியபோது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
ஒருவரை ஒருவர் தாக்கி அடித்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அங்கிருந்த பவுன்சர்கள் நிகழ்ச்சியின் பாதுகாப்பிற்காக நின்ற காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இளைஞர்களை விலக்கினர். பின்பு, அவர்களை அந்த இடத்தில் இருந்து வெளியேற்றினர். இந்த கைகலப்புக்குப் பிறகு சமந்தப்பட்ட இளைஞர்களை இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இந்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடைசியாக ஹிப்ஹப ஆதியின் இசையில் 'அரண்மனை 4' படம் வெளியாகி பாடல்கள் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.