ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’... அந்த சொல்லின் அர்த்தம் என்ன தெரியுமா?
ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படம் இன்று வெளியாகி இருக்கிறது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்துள்ளார். இந்தப் படம் மூலம் தென்னிந்திய திரையுலகில் ஜான்வி அறிமுகமாகிறார். இன்று நள்ளிரவு ஒரு மணிக்கே ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இந்தப் படம் வெளியானதால் ரசிகரகள் நேற்று மாலை முதலே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், ‘தேவரா’ என்ற பட டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ‘தேவரா’ என்றால் தெய்வம் என்ற அர்த்தம் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பொரு பேட்டியிலும் ஜூனியர் என்.டி.ஆர். ‘தேவரா’ என்றால் நாம் வணங்கும் கடவுள் என்று சொல்லியிருந்தார். ஜூனியர் என்.டி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இந்தப் படம் பெரும்பாலும் கடலில் உருவாக்கப்பட்டது எனவும் இந்தியாவில் எந்தவொரு படத்தின் பெரும்பாலான காட்சிகள் இப்படி நீரை ஒட்டி உருவாக்கப்படவில்லை என்றும் படக்குழு சொல்லியிருந்தது. ஆனால், இந்தப்படத்தின் சில காட்சிகள் 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது என இயக்குநர் ஷங்கர் படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது!