விஷ்ணு விஷால் : 'ஹாட் ஸ்பாட்' படம் நான் இல்லாமல் சாத்தியமில்லை என்றார்கள்… ஆனால்?!
‘’ 'ஹாட் ஸ்பாட்'படத்தின் விமர்சனங்களைத் தாண்டி, நீங்கள் தந்த ஆதரவு தான் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. ஓடிடியிலும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. இப்போது இரண்டாம் பாகத்தை, விஷ்ணு விஷால் வழங்குவது மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையை வழங்க தைரியம் வேண்டும். முதல் பாகத்தைப் போலவே, இந்த இரண்டாம் பாகமும் உங்களை மகிழ்விக்கும்" என்று பேசியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.
" 'ஹாட் ஸ்பாட் 2' நான் இல்லாமல் சாத்தியமில்லை என்று எனக்கு முன்பு பேசியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அப்படியில்லை! நல்ல படம் கண்டிப்பாக எப்படியாவது வந்தே தீரும். நல்ல படைப்புகள் நிச்சயம் வெற்றி பெறும். ஹாட் ஸ்பாட் ட்ரெய்லர் பார்த்துவிட்டு எனக்குப் பயங்கர கோபம். கலைக்கு போன் செய்து திட்டினேன். சினிமா எப்போதும் சமூகத்தில் பாதிப்பைத் தரும் என நம்புபவன் நான். அதனால் எனக்குக் கோபம் வந்தது.
எல்லோரும் போல் நானும் இருந்தேன். ஆனால் படம் வந்த பிறகு வந்த பாசிட்டிவ் விமர்சனங்கள் ஆச்சரியமாக இருந்தது. ஹாட் ஸ்பாட் ஓடிடியில் தான் பார்த்தேன். ஒவ்வொரு கதையும் எனக்கு அவ்வளவு பிடித்தது. எனக்கே என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் எனப் புரிய வைத்தது. அப்போதே விக்னேஷை அழைத்து பாராட்டினேன்.
இரண்டாம் பாகத்தின் கதையை என்னிடம் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தது. எனக்குக் கடைசி கதை ரொம்ப பிடித்துள்ளது. பார்க்கும் போது உங்களுக்கும் பிடிக்கும். இந்த 15 வருட அனுபவத்தில் நல்ல கதைகள் தேர்ந்தெடுக்கும் திறமை வந்துள்ளது. ஒரு தயாரிப்பாளராக மாறியுள்ளேன். அதன் முதல் படி 'ஹாட் ஸ்பாட் 2'. இன்னும் பல நல்ல படங்கள் தயாரித்து வருகிறோம்" என்றார்.