ஷங்கரின் அவுட்டேட்டட் பிரசாரம், கமல்ஹாசனின் ரிப்பீட் வசனங்கள்... ‘இந்தியன்-2' ட்ரெய்லர் விமர்சனம்!
ஷங்கரின் பிரமாண்டம்?!
பிரமாண்டம் என்கிற பெயரில் கப்பல், ஹெலிகாப்டர், வில்லன்கள் கொஞ்சும் கேட்வாக் அழகி, சட்டை முதல் சுவர் வரை கலர் கலர் பெயின்ட், சாலையில் ஒன்றுகூடி டிராபிக் ஜாம் செய்யும் மக்கள் கூட்டம் என இதுவரை ஷங்கரின் படங்களில் பார்த்த எல்லாமே ‘இந்தியன் - 2’-விலும் இருக்கிறது. ‘எந்திரன்' துப்பாக்கி கிராபிக்ஸ் உள்பட. அதனால் இந்த ட்ரெய்லரில் புதிதாக சொல்லும்படி, பிரமிக்கவைக்கும்படி ஒரு காட்சிகூட இல்லை என்பது ஏமாற்றமே.குஜராத் நம்பர் பிளேட் கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கிறது. இந்தக் காட்சியின் மூலம் இயக்குநர் எதோ சொல்லவருகிறார் என்பது மட்டும் புரிகிறது!
கமல்ஹாசனின் ரிப்பீட்!
ஊழலுக்கு எதிராக சட்டத்தை கையில் எடுக்கும் வயதான சேனாபதியாக கமல்ஹாசன் நடித்திருக்கிறார். ‘தசாவதாரம்’ ரிப்பீட் போல பல்வேறு கெட் அப்களில் ட்ரெய்லரில் வருகிறார் கமல். கெட் அப்பில் ஓகே… வசனங்களில்கூட ரிப்பீட்டாக இருப்பதுதான் சலிப்படைய வைக்கிறது ‘பிக் பாஸ்' டிவி ரியாலிட்டி ஷோவில் கமல்ஹாசன் சொல்லும் ‘’ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'’ என்கிற வசனத்தை 'இந்தியன் -2'-விலும் சொல்ல வைத்திருக்கிறார்கள். அத்தோடு ‘’டாம் அண்ட் ஜெர்ரி ஆட்டம் ஆரம்பம்'’, ‘’காந்திய வழியில நீங்க… நேதாஜி வழியில நான்’’, ‘’ஆன்ட்டி இந்தியன்னு சொல்லிடலாமா’’ என்பதெல்லாம் அவுட் டேட்டட் வசனங்களாக இருக்கின்றன. குறிப்பாக ட்ரெய்லரில் சித்தார்த் பேசும் வசனங்கள் எல்லாம் பழைய ரஜினிகாந்த், விஜயகாந்த் படங்களைப் பார்த்து சேகரித்த வசனங்கள் போலவே இருக்கிறது. கமல்ஹாசன் ஸ்க்ரீனில் வரும் வரையிலும் இழுவையாக இருக்கிறது ட்ரெய்லர்.
காப்பாற்றிய அனிருத்!
அனிருத்தின் பின்னணி இசைதான் ட்ரெய்லரை காப்பாற்றியிருக்கிறது. இது பயங்கரமான ஒரு படம் என்கிற பில்டப்பை இசையின் வழியே கொடுக்கிறார் அனிருத்.
ரவி வர்மனின் ஒளிப்பதிவு!
ரவி வர்மனின் கேமரா கிரியேட்டிவாக வேலை செய்திருக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் அட்டகாசமாக இருக்கின்றன. கமல்ஹாசன் வந்தப்பிறகான ட்ரெய்லர் எடிட் சிறப்பாக இருக்கிறது. வேகமான ஆக்ஷனுடன் ஸ்லோ-மோஷன் காட்சிகளையும் காக்டெய்லாக இணைத்திருப்பது ரசிக்கும்படியாக இருக்கிறது.
முதல் தீர்ப்பு!
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட படம் என்பது காட்சிகளின் வழியேவும், வசனங்களின் வழியேவும் தெரிகிறது. ஷங்கரின் ஊழல் ஒழிப்பு பிரசாரத்துக்கான காலம் இதுவல்ல.. கமல்ஹாசன் என்னென்ன கெட்அப்களில், என்னவாகவெல்லாம் நடித்திருக்கிறார் என்பதைத்தாண்டி ‘இந்தியன் -2’ படத்தின் மீதான எந்த எதிர்பார்ப்பையும் ட்ரெய்லர் எழுப்பவில்லை!