Inside Out 2 : ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒரு வண்ணம்… அதற்குள் பல எண்ணம்… மூளைக்குள் ஒரு டூர் போலாமா?
2015-ம் ஆண்டு Inside Out என்கிற அனிமேஷன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. அந்த வருடத்தில் அதிகமாக வசூலைக் குவித்த ஹாலிவுட் படங்களின் முன்னணி வரிசையில் இருந்தது. வணிகரீதியான வெற்றி மட்டுமல்லாமல் விமர்சகர்களின் பாராட்டு மழைகளையும் அமோகமாகப் பெற்றது.
இந்தப் படத்தின் திரைக்கதை, தொழில்நுட்பம், மேக்கிங், வடிவமைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் பாராட்டப்பட்டன. சர்வதேச அளவிலான விருதுகளையும் Inside Out வாரிக் குவித்தது. சிறந்த அசல் திரைக்கதை என்கிற பிரிவில் நாமினேட் ஆனதோடு 2015-ம் ஆண்டின் ‘சிறந்த அனிமேஷன் திரைப்படம்’ பிரிவில் ஆஸ்கர் விருதையும் பெற்றது.
இதெல்லாம் தெரிந்த கதைதானே… இப்போது எதற்காக?
Inside Out-ன் முதல் பாகம் அடைந்த மகத்தான வெற்றி காரணமாக, இதனுடைய இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டு கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் வெளியானது. இந்த இரண்டாம் பாகமும், முதல் பாகத்தைப் போலவே வணிக ரீதியான வெற்றி மற்றும் விமர்சகர்களின் பாராட்டு மழை ஆகிய இரண்டையும் பெற்று வருகிறது. இந்த வருடத்தில் ஹாலிவுட்டில் வெளியான படங்களில் அதிக வசூலைப் பெறுகிற படம் என்கிற வகையில் முன்னணி வரிசையில் நிற்கிறது. இந்த இரண்டாம் பாகம், இப்போது இந்தியாவில் காணக் கிடைக்கிறது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கிறது. ஆங்கிலத்தோடு இந்தி வசனங்களின் மூலமாகவும் பார்த்து ரசிக்கலாம்.
அப்படியென்ன ஸ்பெஷல் இந்தப் படம்?
நம் மனதிற்குள், அதாவது மூளைக்குள் பல்வேறு விதமான உணர்ச்சிகள் இருப்பது நமக்குத் தெரியும். மகிழ்ச்சி, கோபம், கவலை, பதட்டம், சலிப்பு, பரவசம் என்று பல உணர்ச்சிகள் ஒவ்வொரு கணமும் மாறி மாறி நம்முடைய மண்டைக்குள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இவற்றை நாம் கண்களால் பார்க்க முடியாது. உணர மட்டுமே முடியும். இந்த உணர்ச்சிகளுக்கு உருவம் இருந்து அவை ஒவ்வொன்றும் எவ்வாறு இயங்குகின்றன, நம் எண்ணங்களுக்கு ஏற்ப எப்படி வேலை செய்கின்றன என்பதை நம்மால் பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும்? சுவாரசியமான கற்பனையாக இருக்கிறதல்லவா? யெஸ்.. இந்தக் கற்பனைக்கு அட்டகாசமான அனிமேஷன் வடிவில் உயிர் கொடுத்து திரைப்பட வடிவில் தந்து அசத்தியிருக்கிறார்கள்.
வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு அசாதாரணமான தொழில்நுட்பத்தின் மூலம் உயிரும் உருவமும் தந்திருப்பவர்கள், பிக்ஸார் அனிமேஷன் ஸ்டூடியோஸ். பிக்ஸார் டீமின் டெக்னாலஜி திறமை எப்படியிருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை. அத்தனை தரமான உருவாக்கம். ஒவ்வொரு ஃபிரேமும் வண்ணங்களாலும் எண்ணங்களாலும் அற்புதமாக நிறைந்திருக்கிறது.
முதல் பாகத்தின் அட்டகாசமான தொடர்ச்சி
Inside Out-ன் முதல் பாகத்தில் என்ன நடக்கிறது?
ரைலி ஆன்டர்சன் என்கிற பெண் குழந்தை பிறக்கிறது. மகிழ்ச்சி, துயரம், கோபம், பயம், அருவெறுப்பு ஆகிய ஐந்து பிரதான உணர்ச்சிகள் அந்தக் குழந்தையை ஆளுமை செய்கின்றன. குழந்தை என்பதால் பெரும்பாலும் மகிழ்ச்சியே பிரதான பங்கு வகிக்கிறது. ஆனால் ரைலி வளர, வளர இதில் மாற்றங்கள் நிகழ்கின்றன. குடும்பத்தில் நிகழும் மாற்றங்களால் கூடுதல் உணர்ச்சிகளுக்கு ரைலி ஆளாகிறாள். மகிழ்ச்சி என்கிற உணர்ச்சி பின்தங்கி இதர உணர்ச்சிகள் அவளை ஆக்ரமிக்கின்றன. பள்ளி அனுபவங்கள் இதில் மேலதிக களேரபத்தைக் கூட்டுகின்றன.
மகிழ்ச்சி என்கிற உணர்ச்சி மெல்ல மெல்ல பின்தங்கும் நிலையில் ரைலி பல்வேறு அனுபவங்களுக்கு ஆளாகிறாள். அவள் எவ்வாறு தன்னுடைய மகிழ்ச்சியை திரும்பப் பெற்றாள் என்பதை முதல் பாகம் மிக சுவாரசியமான வடிவில் சொல்லியிருந்தது. முதல் பாகத்தின் எளிமை இரண்டாம் பாகத்தில் இல்லை. கூடுதல் சிக்கல்கள் இருக்கின்றன. நாம் வளர வளர பிரச்சினைகளும் பெரிதாகத்தானே செய்யும்?!..
இரண்டாம் பாகத்தில் என்னவெல்லாம் நடக்கிறது?..
சிறுமியான ரைலி வளர்ந்து டீன்ஏஜ் பருவத்தை அடைகிறாள். அவள் வயதுக்கு வருவதற்கான ஹார்மோன் மாற்றங்கள் உடலில் தயாராகின்றன. ஹைஸ்கூலுக்கு மாற வேண்டிய சூழலும் இதில் சேர்ந்து கொள்கிறது. பழைய தோழிகளை கைவிட வேண்டிய சங்கடம், புதிய தோழிகளுடன் நட்பைச் சம்பாதிக்க வேண்டிய நெருக்கடி, தனக்குப் பிடித்தமான Firehawks என்கிற ‘ஐஸ் ஹாக்கி’ அணியில் இடம் பெற வேண்டிய துடிப்பு போன்ற விஷயங்கள் அவளுடைய மனதிற்குள் பல்வேறு உணர்ச்சிகளை ஏற்படுத்துகின்றன. ரைலியின் மனதிற்குள் நடக்கும் இந்த ரோலர் கோஸ்டர் பயணம்தான், Inside Out-ன் இரண்டாம் பாகம்.
ரைலி குழந்தையாக இருந்த போது பிரதானமாக இருந்த மகிழ்ச்சி, துயரம், கோபம், பயம், அருவெறுப்பு ஆகிய ஐந்து உணர்ச்சிகளோடு பதட்டம், பொறாமை, வெட்கம், சோம்பல் போன்ற உணர்ச்சிகளும் டீன்ஏஜ் ரைலியோடு இணைந்து கொள்கின்றன. இவை தவிர இன்னபிற உபரி உணர்ச்சிகளும் ஆங்காங்கே வந்து வந்து விலகிப் போகின்றன.
ஒருவரின் அடிப்படையான குணாதிசயங்களைத் தாண்டி, இளம் வயதின் அனுபவங்களே அவருடைய ஆளுமையைத் தீர்மானிக்கும் ஆதாரமான அம்சமாக அமைகிறது என்பது உளவியலாளர்களின் கருத்து. இளம் வயதில் கிடைக்கும் அனுபவங்கள், கடந்து வரும் பாதைகளும்தான் ஒருவர் நல்லவரா, அல்லது கெட்டவரா என்பதை தீர்மானிக்கும் ஆதாரமான காரணியாக இருக்கிறது.
ரைலியின் ரோலர் கோஸ்டர் அனுபவங்கள்
ஹை-ஸ்கூலுக்கு மாற வேண்டியிருக்கும் ரைலி, தன்னுடைய தோழிகளுடன் ஐஸ்ஹாக்கி அணியின் பயிற்சிக்காக மகிழ்ச்சியுடன் கிளம்புகிறாள். தன்னுடைய இரண்டு தோழிகளும் எதையோ மறைக்கிறார்கள் என்பதை முகக்குறிப்பால் அறிகிறாள். அவர்கள் இருவரும் வேறு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லவிருப்பதை அறியும் ரைலிக்கு உள்ளுக்குள் துயரம் வந்தாலும் சமாளித்துக் கொள்கிறாள். நட்பிற்குள் தன்னிச்சையாக ஒரு விரிசல் வந்து விழுகிறது.
பழைய தோழிகள் இல்லாத நிலையில் புதிய சூழலை எதிர்கொள்ள வேண்டிய ரைலி, அதற்கான மாற்றங்களுக்கு தயாராகிறாள். ஐஸ் ஹாக்கி டீமின் கேப்டனைக் கவர்வதற்காக செயற்கையாகப் புகழ்கிறாள். அணி நண்பர்களுடன் இணக்கமாவதற்காக அவளுடைய வாயிலிருந்து தன்னிசையாக பொய்கள் உதிர்கின்றன. தன்னுடைய பழைய தோழிகளை அப்படியே கை விட்டு விட்டு புதிய அணியுடன் தன்னைப் பொருத்திக் கொள்ள முயற்சிக்கிறாள். கோச் காட்டும் கெடுபிடி அவளைப் பதட்டத்திற்கு ஆளாக்குகிறது.
இந்த மாற்றங்கள் எல்லாம் ரைலியின் மனதிற்குள் எந்த மாதிரியான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன? எவ்வாறு சமாளிக்கின்றன? எவ்வாறு நிலைமையைக் கட்டுப்படுத்த முயல்கின்றன? எப்படி பழைய நிலைமைக்கு திரும்புவதற்காக போராடுகின்றன?...
இவற்றையெல்லாம் வார்த்தைகளில் கேட்டு விடுவது எளிது. மூளை என்னும் அசாதாரணமான, பிரம்மாண்டமான தொழிற்சாலைக்குள் உணர்ச்சிகள் எப்படியெல்லாம் செயலாற்றுகின்றன என்பதை அனிமேஷன் வழியாக காட்சிப்படுத்தியிருக்கும் விதம் இருக்கிறதே… அபாரம்.
மானங்கெட்ட மனதின் மரணப் போராட்டம்
நாம் விழித்திருக்கும் சமயங்களிலும் சரி, தூங்கச் செல்லும் நேரம், விழித்து எழுந்திருக்கும் நேரம் போன்ற சமயங்களிலும் பல்வேறு எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும். அவை பல்வேறு உணர்ச்சிகளின் கலவையாக இருக்கும். அன்று செய்யவிருக்கும் ஒரு பணியை எப்படிச் செய்யப் போகிறோம் என்கிற பதட்டம், கவலை… பிடிக்காத ஒரு ஆசாமியின் மீது ஏற்படும் கோபம், அச்சம், சிலவற்றை எதிர்கொள்ள வேண்டிய சங்கடம் “பார்த்துக்கலாம் விடு” என்று சொல்லி மீண்டும் மகிழ்ச்சியை வரவழைக்கிற சமாதானம் போன்றவை உள்ளுக்குள் தொடர்ந்து அலையடித்துக் கொண்டேயிருக்கும். நாம் தூங்கிக் கொண்டிருக்கும் சமயத்திலும் நம் மனது உறங்குவதில்லை. அநாவசியமான, பழைய எண்ணங்களை துப்புரவு செய்தபடியே இயங்கிக் கொண்டிருக்கும்.
இவற்றையெல்லாம் யாராவது காட்சிப்படுத்தி நம் முன்னே திரையிட்டால், நம்முடைய ப்ளஸ் மற்றும் மைனஸ் பாயின்ட்டுகளை நாமே ஓரளவிற்கு புரிந்து கொள்ளும் முதிர்ச்சி ஏற்படலாம். ரைலியின் மூலம் அப்படியொரு மகத்தான அனுபவத்தை இந்தத் திரைப்படம் நமக்குத் தருகிறது.
‘நான் நல்லவனா.. கெட்டவனா?’
வளரிளம் பருவத்தில்தான் ‘நான்’ என்கிற அடையாளம் மிக வலுவாக வளர ஆரம்பிக்கும். நாம் செய்யும் நல்ல செயல்களும் கெட்ட செயல்களும் அவற்றைத் தோற்றுவிக்கும் எண்ணங்களும் தங்களுடன் மிகவும் போராடும். கெட்டவற்றின் பக்கம் செல்லும் போதெல்லாம் மனசாட்சி எச்சரிக்கும். அதையும் மீறிச் செல்லும் போது பதட்டம், குற்றவுணர்ச்சி, வருத்தம் போன்றவைகளும் இணைந்து கொள்ளும்.
டீன்ஏஜிற்குள் நுழையும் ரைலியின் மனதிற்குள் ஏற்படும் இந்த மாற்றங்கள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. புதிய கேப்டனிடம் ஐஸ் வைப்பது, பழைய தோழிகளை விட்டு விலகுவது, அணியில் இடம் பெறுவதற்காக ஆவேசமாக ஆடுவது, தவறு செய்து வருந்துவது என்று ரைலிக்குள் மாறி மாறி நிகழும் உணர்ச்சியோட்டங்கள், உருவங்களாக செயலாற்றும் விதமும் அவை இணைந்து ரைலியைக் காப்பாற்றுவதற்காக எடுக்கும் கடுமையான போராட்டமும் சுவாரசியமான கதையைச் சொல்கின்றன.
திரைப்படம் தரும் உளவியல் பாடம்
ரைலிக்குள் பிரதான பாத்திரத்தை ஏற்கும் மகிழ்ச்சிக்கு (Joy) ஒரு கட்டத்தில் சோர்ந்து விடுகிறது. அந்த அளவிற்கு எதிர்மறையான உணர்ச்சிகள் ஆளுமை செய்ய ஆரம்பித்து விடுகின்றன. சிறுமியாக இருந்த போது இருந்த உணர்ச்சிகளும், வளர்ந்த பிறகு புதிதாக நுழைகிற உணர்ச்சிகளும் இரண்டு அணிகளாகப் பிரிந்து போராடுகின்றன. புதிய உணர்ச்சிகள் ஏற்படுத்துகிற களேபரத்தை தடுத்து நிறுத்துவற்காக பழைய அணி போராடுகிறது.
ஒவ்வொரு உணர்ச்சிக்கும் ஒவ்வொரு வண்ணம் , தலைமைச் செயலகம் என்று சொல்லப்படும் மூளையின் கட்டுப்பாடு அமைப்புகள், அவற்றிற்குள் நிகழும் உணர்ச்சிப் பிரவாகங்கள், உணர்ச்சிகள் நம்மைக் கட்டுப்படுத்தும் விதம் போன்றவை அனிமேஷன் காட்சிகளாக விரியும் போது நம்முடைய மூளைக்குள் நாமே ஒரு சுற்றுலா சென்று வந்ததைப் போல் இருக்கிறது.
அசாதாரணமான தொழில்நுட்பம், சுவாரசியமான கற்பனை, அட்டகாசமான திரைக்கதை, வண்ணங்கள் நிறைந்திருக்கும் ஒளிப்பதிவு போன்றவை இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பதை சிறந்த அனுபவமாக்குகின்றன. ஹாலிவுட் கலைஞர்கள் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான குரலைத் தந்து மகிழ்வூட்டியிருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தை குழந்தைகளும் வளரிளம் பருவத்தினரும் பார்ப்பது கட்டாயம். மட்டுமல்லாமல் பெரியவர்களும் பார்ப்பது அவசியம். உணர்ச்சிகள் நம்மைக் கட்டுப்படுத்த அனுமதிக்காமல், நாம் உணர்ச்சிகளை முதிர்ச்சியாக கையாளத் தெரிந்தால் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியே என்கிற மகத்தான உளவியல் பாடத்தை கற்றுத் தருகிறது, Inside Out -2.