''பிறந்தநாளை துக்க நாளாக மாற்றியவர்களுக்கு நன்றி… பாவம் செய்யாதவர்கள் கல்லெறியட்டும்'’ - ஜெயசூர்யா
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரும், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருப்பவருமான ஜெயசூர்யா தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
''இன்று என்னுடைய பிறந்தநாள். அன்புடனும் வாழ்த்துகளுடனும் என்னுடன் இருக்கும் அனைவருக்கும் நன்றி. தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஒரு மாதமாக நான் எனது குடும்பத்துடன் அமெரிக்காவில் இருக்கிறேன். இதற்கிடையே, எதிர்பாராத விதமாக என் மீது இரண்டு பொய்யான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எல்லோரையும்போலவே இது என்னையும் உடைத்துப்போட்டுள்ளது. எனது குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த துயத்தில் உள்ளனர். இது எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் ஆறாத புண்ணாக, பெரும் வேதனையாக மாறியுள்ளது.
சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். இந்த விவகாரத்தில் மீதியை அவர்கள் முடிவு செய்வார்கள். யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லலாம். யாருக்கும் மனசாட்சி மிச்சமிருப்பதாக தெரியவில்லை. பொய்யாக பாலியல் சித்திரவதை குற்றச்சாட்டை சுமப்பது என்பது அந்த பாலியல் சித்திரவதையைவிட கொடூரமானது. உண்மை செருப்பு அணிவதற்குள், பொய் உலகப் பயணத்தை முடித்துவிடும் எனச்சொல்வார்கள். ஆனால், என்ன நடந்தாலும் எப்போதும் இறுதியில் வாய்மையே வெல்லும்.
அமெரிக்காவில் வேலை முடிந்தவுடன் மீண்டும் இந்தியா வருவேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க என்னுடைய சட்டப் போராட்டம் தொடரும். நமது நீதி அமைப்பு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பிறந்தநாளை மிகவும் சோகமானதாக மாற்றியவர்களுக்கு நன்றி. பாவம் செய்யாதவர்கள் மட்டும் பாவிகள் மீது கல்லெறியட்டும்’’ என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகர் ஜெயசூர்யா.
விரைவில் உண்மைகள் வெளிவரட்டும்!