ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பட ரிலீஸ்... நள்ளிரவில் பகீர் கிளப்பிய ரசிகர்கள்!
கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘தேவரா’ படம் இன்று வெளியாகியுள்ளது. ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தின் வெற்றிக்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து ஜூனியர் என்.டி.ஆரின் படம் வெளியாகிறது என்பதால் ரசிகர்கள் படம் பார்க்க மிகவும் ஆர்வத்துடன் இருந்தனர். தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா படமாக இது வெளியாகி உள்ளது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இந்தப் படத்தின் முதல் காட்சி நள்ளிரவு ஒரு மணிக்கே ஒளிபரப்பானது. இதனால், நேற்று மாலையில் இருந்தே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
திரையங்குகள் வாசலில் ஜூனியர் என்.டி.ஆரின் கட் அவுட் வைத்து மாலைகள் அணிவித்தும், பால் அபிஷேகம், பட்டாசு வெடிப்பது என ஆட்டம் பாட்டமாக கொண்டாடினார். ஆனால், இதையெல்லாம் விஞ்சும் விதமாக ‘தேவரா’ பட போஸ்டர் முன்பு ஆடு ஒன்றை கொண்டு வந்து தலையை வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ரசிகர்கள்.
இந்த பகீர் கிளப்பும் காட்சிகளைப் பார்த்த இணையவாசிகள் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களைத் திட்டி தீர்த்து வருகின்றனர். ‘தேவரா’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டபோது நிகழ்வு அரங்கின் கண்ணாடிகளை உடைத்தும், பட போஸ்டர்களை கிழித்தும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டது நினைவிருக்கலாம்.