பிக் பாஸுக்கு நோ சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குப் பறந்த கமல்ஹாசன்… 70 வயதிலும் தீராத தாகம்!
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சித் தமிழில் ஆரம்பித்ததில் இருந்தே அதன் தொகுப்பாளராக, அதன் முகமாக இருந்தவர் கமல்ஹாசன். ஆனால், இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த கமல்ஹாசன் திரைப்பட வேலைகள் அதிகம் இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், தற்போதைய தகவல்படி அவர் வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பமான ஆர்ட்ஃபிஷியல் இன்ட்டெலிஜென்ஸ் குறித்து படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். மூன்று மாத பாடத்திட்டமான ஆர்ட்டிஃபிஷியல் இன்ட்டெலிஜென்ஸ் குறித்து படிப்பதற்காக கடந்த வாரமே அமெரிக்கா சென்றிருக்கும் கமல்ஹாசன் அங்கே 45 நாட்கள் மட்டுமே தங்கியிருப்பார் என்றும், மீதி பாடத்திட்டத்தை ஆன்லைன் மூலம் நிறைவு செய்வார் என்றும் சொல்கிறார்கள்.
கமல்ஹாசன் தனது வாழ்க்கை முழுவதையும் சினிமாவுக்கென அர்ப்பணித்தவர். "சினிமாதான் எனது வாழ்க்கை. நான் ஒரு நடிகன் மட்டுமல்ல, ஒரு தயாரிப்பாளரும் கூட. நான் திரைப்படங்களில் இருந்து சம்பாதித்த அனைத்தையும் திரைத்துறையிலேயே மீண்டும் முதலீடு செய்கிறேன்" என்று முன்பொருமுறை பேட்டியில் சொல்லியிருந்தவர் AI தொழில்நுட்பம் குறித்தும் பேசியிருந்தார்.
70 வயதிலும் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் பயணிக்கும் கமல்ஹாசனின் முயற்சியை உண்மையிலேயே மனதார பாராட்டலாம்!