சிவகார்த்திகேயனை வைத்து ஸ்கெட்ச்… மீண்டும் ரஜினிகாந்த்தோடு மோதும் கமல்ஹாசன்!
ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் வெளியே எவ்வளவுதான் நண்பர்களாக இருந்தாலும் உள்ளுக்குள் தொழில்முறைப் போட்டி என்பது அப்போதில் இருந்து இப்போது வரை நீடித்துக்கொண்டேதான் இருக்கிறது.
கொரோனாவுக்கு முன்பு திட்டமிடப்பட்டு, ராஜ்கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருந்தப்படம் திடீரென ரஜினியின் விலகலால் நின்றுபோனது. இதனால் அந்தப்படத்தில் கமல்ஹாசனே நடிக்க, கதை மாற்றப்பட்டு எடுக்கப்பட்ட படம்தான் ‘விக்ரம்'. ரஜினி உள்பட யாருமே எதிர்பாராத வகையில் 2022-ல் ‘விக்ரம்' படத்தின் மூலம் கமல்ஹாசன் மிகப்பெரிய ஹிட் கொடுக்க உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கவேண்டும் என நெல்சனை வைத்து ரஜினிகாந்த் கொடுத்த படம்தான் ‘ஜெயிலர்’.
ரஜினி அதோடு நிற்காமல் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜின் அடுத்த கதைக்கு ஓகே சொல்லி அவர் இயக்கும் ‘கூலி' படத்தில் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். ரஜினி, தன்னுடைய ரசிகரை அவர் பக்கம் இழுக்க, கமல்ஹாசன் ரஜினியின் ரசிகரை தன் பக்கம் ஈர்த்து, இந்த தீபாவளியில் மீண்டும் ரஜினிகாந்த்தோடு மோத நாள் குறித்துவிட்டார்.
ரஜினிகாந்த்தின் ‘வேட்டையன்' தீபாவளி ரிலீஸாக அக்டோபர் 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘அமரன்' படத்தை மோதவிடுகிறார் கமல்ஹாசன். அதிகாரப்பூர்வமாக 'அமரன்' அக்டோபர் 31 ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகனை வைத்தே ரஜினிக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறார் கமல். வரும் அக்டோபர் 31-ம் தேதி ரஜினிகாந்த்தோடு மோதப்போகிறார் சிவகார்த்திகேயன். இரண்டு படங்களையும் வெளியிடப்போவது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம்.
வெல்லப்போவது வேட்டையானா, அமரனா?!