‘’ஹிட்ச்காக்குக்கு கிடைத்த வாய்ப்பு ஷங்கருக்கு கிடைத்திருக்கிறது'’- ‘இந்தியன்-2' குறித்து கமல்ஹாசன்!
‘இந்தியன்- 2’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ‘’உயிரே…உறவே… தமிழே’’ எனப் பேசத்தொடங்கினார் கமல்ஹாசன்.
‘’உலக சினிமாவில் ஒரு சினிமாவை செய்துவிட்டு அதை இரண்டாம் முறை செய்யும்போது அதே டைரக்டர் இயக்குவது என்பது இரண்டு முறை மட்டுமே நடந்திருக்கிறது. 39 ஸ்டெப்ஸ் படத்ததை கறுப்பு வெள்ளையிலும், பின்னர் கலரிலும் எடுத்தார் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்(Alfred Hitchcock). அதேப்போல் சிசெல் பி டிமெல்(Cecil B. DeMille) ‘10 காமண்ட்மென்ட்ஸ்’ படத்தை கறுப்பு வெள்ளையிலும், பின்னர் கலரிலும் எடுத்தார். அந்தப் படங்கள் இன்றுவரைப் பேசப்படுகின்றன. பியு சின்னப்பா நடித்த ‘உத்தமபுத்திரன்' படத்தில் பின்னர் சிவாஜிதான் நடிக்கவேண்டியிருந்தது. அதுபோல ஒரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. இப்போது ஷங்கருக்கு கிடைத்திருக்கிறது. ஷங்கருக்கு கிடைத்ததால் எனக்கும் கிடைத்திருக்கிறது.
28 வருடங்களுக்கு முன்னர் ‘இந்தியன்' படத்தின் டப்பிங் நடந்துகொண்டிருந்தபோது ஷங்கரிடம் ‘’இரண்டாம் பாகம் எடுத்துடலாமா’ எனக் கேட்டேன். அப்போதிருந்த ரிலீஸ் டென்ஷனில் ‘இப்ப அதெல்லாம் பேசாதீங்க’னு ஷங்கர் சொன்னார். அப்போது நினைத்தது இப்போது நடந்திருக்கிறது.
இப்போதும் இந்தியன் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான கருவை கொடுத்துக்கொண்டிருக்கும் அரசியலுக்கு நன்றி. விவேக் நடித்த காட்சிகளை இப்போதுதான் எடுத்ததுபோல இருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என்பதற்கு இந்தியன் 1-2 படங்களே உதாரணம்’’ என்று சொல்லிவிட்டு ஒளிப்பதிவாளர் ரவிவர்மனைப் பார்த்தவர் ‘’ரவி வர்மன் பேசும்போது ‘இதேமாதிரி இன்னொரு படத்தை ஷங்கரும், கமல்ஹாசனும் நினைத்தாலே எடுக்கமுடியாது’ என்று சொன்னார். எடுத்திருக்கிறோம் அதுதான் இந்தியன் 3’’ என எக்ஸ்குளூசிவ் செய்தியையும் சொன்னார் கமல்ஹாசன்!