சூர்யாவின் ‘கங்குவா’ பட எடிட்டர் மர்மமான முறையில் மரணம்… போலீஸ் விசாரணை!
மலையாள சினிமா உலகின் பிரபலமான படத்தொகுப்பாளர் நிஷாத் யூசுப். இவர் சிறந்த படத்கொகுப்பாளருக்கான மாநில விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இவர்தான் அடுத்தமாதம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘கங்குவா’ படத்தின் படத்தொகுப்பாளர்.
43 வயதான நிஷாத் யூசுப் கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசித்துவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை தூக்கில் தொங்கியபடி இருந்த அவரது உடலை உறவினர்கள் மீட்டிருக்கிறார்கள். மிகவும் பரபரப்பாக எடிட்டராக வேலை பார்த்துக்கொண்டிருந்த நிஷாத் யூசுப்பின் தற்கொலை சினிமா உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இவரது எடிட்டிங்கில் பல்வேறு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. சூர்யாவின் அடுத்தப்படமாக ஆர்ஜே பாலாஜி இயக்கயிருக்கும் படத்துக்கும் இவர்தான் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
'தள்ளுமாலா', 'உண்டா', 'ஆபரேஷன் ஜாவா', 'செளதி வெள்ளக்கா' உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் எடிட்டராகப் பணியாற்றியிருக்கிறார். பேன் இந்தியா படமாக ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டிருந்த சூழலில் நிஷாத் யூசுப் ஏன் தற்கொலை செய்துகொண்டார் அல்லது அவரது மரணத்தில் வேறு ஏதும் மர்மங்கள் இருக்கிறதா எனப் போலீஸார் விசாரணை செய்துவருகிறார்கள்.