நயன்தாரா - கவின் காம்போ… இயக்குநர் யார், கதை என்ன?!
சின்னத்திரை நடிகராக இருந்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நம்பிக்கை ஹீரோக்கள் வரிசைக்கு முன்னேறியிருப்பவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் - மீனாட்சி' தொடர், ‘பிக்பாஸ்' ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான கவினின் கரியர் கிராஃப் இப்போது சினிமாவில் உயர்ந்துகொண்டே போகிறது. கடந்த ஆண்டு ‘டாடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கவன், இந்த ஆண்டு ‘ஸ்டார்' படத்தின் மூலம் கோலிவுட்டில் எதிர்காலம் உள்ள நடிகர் என்கிற இடத்தைப் பிடித்திருக்கிறார்.
தற்போது இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் நடித்திருக்கும் ‘பிளடி பெக்கர்' படம் ரிலீஸுக்குத்தயாராக இருக்கும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து ‘மாஸ்க்' எனும் படத்திலும் நடித்துவருகிறார்.
இதற்கிடையே விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் கவின். படத்தின் இயக்குநராக தயாரிப்பாளர் நயன்தாராவே நடிக்க இருக்கிறார். ‘ராஜா ராணி' படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்த சத்யராஜ் இந்தப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜிடம் ‘மாஸ்டர்', 'லியோ' படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஷ்ணு எடவன் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். படத்துக்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கடந்த வாரம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையில், முழுமையான படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் தொடர்ந்து நடக்க இருக்கிறது.
35 வயது பெண்ணிடம் வயது குறைவான இளைஞன் காதல் வயப்படுவதே கதை என சொல்லப்படுகிறது. கவனுக்கு ஜோடியாக நயன்தாரா இல்லாமல் இன்னொரு ஹீரோயினும் படத்தில் இருப்பார் என்கிறார்கள்.