KOOKI
KOOKI

KOOKI : மழையில் கரைந்த ‘குக்கி’யின் கனவுகள்... ஏன் இந்தப் படத்தை தவறாமல் பார்க்கவேண்டும்?

எழுத்தாளர் சுரேஷ் கண்ணன் சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'KOOKI' படத்தை தவறாமல் பார்க்க வேண்டும் என பரிந்துரைக்கிறார், தான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று எனக் குறிப்பிடுகிறார். ஏன் இந்தப் படத்தை தவறாமல் பார்க்கவேண்டும் எனச் சொல்கிறார்?!
Published on

‘பெண்களின் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்புணர்வுகள்,  ஏன் நீதிமன்றத்தால் கொடூரமான குற்றமாக கருதப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்படுவதில்லை?’ -  இப்படியொரு கேள்வியை ‘குக்கி’ என்கிற இந்தத் திரைப்படம் மிக வலிமையாகவும் உணர்ச்சிகரமாகவும் முன்வைக்கிறது. படத்தில் சித்திரிக்கப்படும் ‘குக்கி’ என்கிற இளம்பெண், தன்னுடைய  ஆவேசமான வாக்குமூலத்தின் வழியாக கேட்கும் இந்தக் கேள்விக்கு பார்வையாளர்கள் மட்டுமல்லாது, சமூகத்திடமும் நிச்சயம்  பதிலிருக்காது என்று தோன்றுகிறது. 

சமீபத்தில் நான் பார்த்த மிகச் சிறந்த திரைப்படங்களுள் ஒன்றாக இதைச் சொல்வேன். யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான காட்சிகள், இது ‘திரைப்படம்’ என்பதை மறக்கடித்து பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை பரிவுடனும் பதட்டத்துடனும் அருகிலிருந்து  பார்க்கிற அனுபவத்தைத் தருகிறது. டைட்டில் ரோலில் நடித்திருக்கிற இளம் பெண்ணான Ritisha Khaund முதல் அத்தனை நடிகர்களும் தங்களின் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். 2024-ம் ஆண்டின் ‘கான்’ திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட அங்கீகாரத்தை இந்தப் படம் பெற்றுள்ளது. 

KOOKI
KOOKI

மழையின் காதலிக்கு நிகழும் விபரீதம்

குக்கி பதினாறு வயது இளம்பெண். அவளுடைய தந்தை ஒரு வழக்கறிஞர். கல்லூரியில் படிக்கும் சக மாணவன் மீது குக்கிக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. ஆனால் சொல்லத் தயங்குகிறாள். ‘எப்பத்தான் சொல்லப் போறே… பேசாம நான் அவனை லவ் பண்ணிடவா?” என்று நெருக்கமான தோழி கிண்டலடிக்கிறாள். குக்கியும் சப்தரிஷியும் தங்களின் காதலை பரஸ்பரம் மெல்ல மெல்ல வெளிப்படுத்திக் கொள்ளும் காட்சிகள் அத்தனை இயல்பாகவும் கண்ணியமாகவும் இருக்கின்றன. 

மகளிடம் தெரியும் மாற்றத்தைக் கண்டு ‘என்னம்மா விஷயம்?” என்று சூசகமாகவும் தோழமையாகவும் விசாரிக்கிறார் தந்தை. ஒரு முக்கியமான விஷயத்தை இளம் தலைமுறையிடம் எப்படி இணக்கமாக ஆரம்பித்து பேசுவது என்று பாடம் எடுக்கும் அளவிற்கு இந்த உரையாடல் அத்தனை அற்புதமாக இருக்கிறது. 

குக்கி மென்மையானவள். மழையின் பெரும் காதலி. மழை தொடர்பான எந்தவொரு விஷயத்தையும் கொண்டாடுபவள். ‘மழை பெய்து கொண்டிருக்கும் தருணத்தில்தான், காதலனிடமிருந்து முதல் முத்தம் கிடைக்க வேண்டும்’ என்கிற அளவிற்கு மழையை நேசிப்பவள். ஆனால் மழை பெய்து கொண்டிருக்கும் ஒரு துர்தருணத்தில்தான் அவளுடைய வாழ்க்கையில் ஒரு விபரீதம் நிகழ்கிறது. 

மிருகங்களால் சிதைக்கப்படும் சிறுபறவை

திருவிழாவிற்கு தன் காதலனை வரச் சொல்லியிருந்தாள் குக்கி. நண்பன் பைக்கை எடுத்துச் சென்றிருப்பதால் அவனால் உடனே வர முடிவதில்லை. பொறுமையிழக்கும் குக்கி அவனை அழைத்து வருவதற்காக தானே ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்புகிறாள். “உனக்கென்ன பைத்தியமா? இப்படியா நைட்ல தனியாப் போவாங்க..?  காதல் வந்துட்டாலே பைத்தியமும் வந்துடும் போல” என்று தோழி செல்லமான அக்கறையுடன் எச்சரிக்கிறாள். 

KOOKI
KOOKI

நல்ல இருட்டான நீண்ட சாலையில் வெளிச்சக் கீற்றுடன் குக்கியின் வாகனம் சென்று கொண்டிருப்பது  லாங் ஷாட்டில் காட்டப்படுகிறது. வாகனம் எதன் மீதோ மோதி விழும் சத்தமே நமக்கு படபடப்பை ஏற்படுத்துகிறது. வழியில் நாலைந்து இளைஞர்கள் குடித்து விட்டு அலப்பறை செய்து கொண்டிருக்கிறார்கள். இருட்டில் அவர்களில் ஒருவன் மீது வண்டியை லேசாக இடித்து விடுகிறாள் குக்கி. பதறிப் போய் உடனே மன்னிப்பும் கேட்கிறாள். 

ஆனால் குடிபோதையிலும் காமவெறியிலும் இருக்கிற அந்த இளைஞர்கள், இந்தச் சந்தர்ப்பத்தை விடுவதாக இல்லை. குக்கியை இழுத்துப் போட்டு கீழே தள்ளுகிறார்கள். முகத்தில் தாக்குகிறார்கள். பிறகு புதர்களின் ஒரமாக அவளை இழுத்துச் சென்று கூட்டு வன்புணர்ச்சியில் மிருகத்தனமாக ஈடுபடுகிறர்கள். குக்கி கதறுகிறாள் கைகூப்பி வேண்டுகிறாள். விட்டு விடச் சொல்லி மன்றாடுகிறாள். தன்னை விடுவித்துக் கொள்ள போராடுகிறாள். ஆனால், அந்த மிருகங்களின் காதில் இவை விழுவதில்லை. மழையின் பெரும் காதலியான குக்கிக்கு மழை பெய்யும் நேரத்திலேயே இந்த துர்சம்பவம் நிகழ்வது துயரத்தைக் கூட்டுகிறது.  இந்தக் காட்சிகள் அசலான பதட்டத்தை ஏற்படுத்துவது போல் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. 

KOOKI
பிக் பாஸ் தமிழ்: யார் மனம் கவர்ந்த டாப் 5 போட்டியாளர்கள்?! சுரேஷ் கண்ணணின் ஃபேவரிட் லிஸ்ட்!

குக்கியின் உடலைப் பார்க்கும் மருத்துவர் அதிர்ச்சியில் உறைந்து விடுகிறார். ஒரு பறவையை நாலைந்து காண்டாமிருகங்கள் மிதித்து விட்டுச் சென்றதைப் போல் குக்கியின் உடல் சேதமுற்றிருக்கிறது. ‘‘இதை எப்படி பெண்ணுடைய பெற்றோர்களின் சொல்லுவேன். அவர்கள் எப்படி இதைத் தாங்குவார்கள்?” என்று மருத்துவர் தயங்குகிறார். வேறு வழியில்லை. சொல்லித்தான் ஆக வேண்டும். குக்கியின் தந்தையைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொல்கிறார்கள். தலையில் இடி விழுந்தது போல குக்கியின் தந்தை மருத்துவர் அறையை விட்டு வெளியே வரும் காட்சி அத்தனை உருக்கத்தை ஏற்படுத்துகிறது.

தவிர்க்கப்பட்டிருக்கும் ‘கோர்ட் ரூம் டிராமா’ காட்சிகள்

குக்கியின் தந்தை பிரபலமான வழக்கறிஞர் என்பதால் உயர்மட்ட காவல்துறை அதிகாரியிடம் இது பற்றி புகார் செய்கிறார். அந்த உயர்அதிகாரி பெண் என்பதால் இந்த வழக்கு விசாரணையை   கூடுதல் கவனத்துடன்  முடுக்கி விடுகிறார். மூலைக்கு ஒன்றாக பதுங்கியிருக்கும் குற்றவாளிகள், போலீசாரால் பிடிக்கப்படும் காட்சிகள் மிக இயல்பான காட்சிகளாக பதிவாகியிருக்கின்றன. பெண்ணின் தந்தை பிரபலமான வழக்கறிஞராக அல்லாமல் ஓர் எளிய மனிதராக இருந்திருந்தால் இந்த வழக்கு என்னவாகியிருக்கும் என்கிற யோசனையும் கூடவே ஓடுகிறது. 

குக்கியின் தந்தை வழக்கறிஞர் என்பதால் ‘கோர்ட் ரூம் டிராமா’ காட்சிகள் மிக நீளமாக இருக்கும் என்று எதிர்பார்த்தால்.. இல்லை. அப்படி ஆகியிருந்தால் ஒருவேளை இது வழக்கமான படமாக ஆகியிருக்கலாம். பொதுவாக அப்படித்தான் ஆகி விடும். பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பாக மிக நீண்டதொரு போராட்டம் நடக்கும். மக்கள் கொந்தளிப்பார்கள். காவல்துறைக்கு நெருக்கடி நிகழும். மிக நீளமான வாதப் பிரதிவாதங்கள் கோர்ட்டில் நடக்கும். பாதிக்கப்பட்ட  தரப்பின் வழக்கறிஞர் திறமையானவராக இருந்து சாட்சியங்களும் வலிமையாக இருந்தால் வழக்கில் வெற்றி கிடைக்கும். ‘நீதி கிடைத்தது’ என்கிற ஆசுவாசத்துடன் படம் நிறைவு பெறும்.  பார்வையாளர்களும் அதே ஆசுவாசத்துடன் வெளியேறுவார்கள். 

‘குக்கி’ திரைப்படம் உண்மையில் இங்கிருந்துதான் துவங்குகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரின் தரப்பு வெற்றி பெறுகிறது. மாறுதலாக நீதிமன்றக்காட்சிகள் எதுவும் காட்டப்படுவதில்லை. ‘நீதி வென்றது, எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது’ என்பது போல குக்கியின் தந்தை ஊடகங்களிடம் பேசுகிறார். 

வன்முறையால் பாதிக்கப்படும் பெண்ணின் அகத்துயரம்

இதற்குப் பிறகு குக்கி எதிர்கொள்ளும் உளவியல் பதட்டங்கள், துர்கனவுகள், மனஉளைச்சல் தொடர்பான காட்சிகள் உணர்ச்சிகரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குக்கிக்கு நிகழ்ந்த பாதிப்பு தொடர்பான அனுபவமும் உருவங்களும் மூளைக்குள் ரீவைண்ட் காட்சிகளாக ஓடிக் கொண்டேயிருக்கின்றன. எந்த மழையை குக்கி அப்படி நேசித்தாளோ, அவளே மழைநீர் பட்டதுமே பதறியோடுபவளாக மாறிப் போகிறாள். காதலனின் இயல்பான தொடுகையை ‘ச்சீ.. என்னைத் தொடாதே’ என்று மிரள்கிறாள். முரட்டுத்தனமான இளைஞர்களைக் கண்டாலே அவளுக்குள் பதட்டம் தொற்றிக் கொள்கிறது. 

KOOKI
‘வேட்டையன்’ ட்ரெய்லர் சொல்வது என்ன : உச்ச நட்சத்திரங்களின் வணிகத்துக்கு பலியாகிறார்களா இயக்குநர்கள்?

“நடந்த விஷயத்தை அவளுடைய மனது ஏற்றுக் கொள்ள வேண்டும். மெல்ல மெல்லத்தான் இந்தப் பழக்கத்தை அவளுக்கு ஊட்ட வேண்டும். அதுவரை பொறுமை தேவை. குடும்பமும் சுற்றமும் தங்களுடைய அன்பின் மூலம் அவளை சமநிலைப்படுத்த வேண்டும்’ என்பது உளவியல் மருத்துவரின் ஆலோசனையாக இருக்கிறது. எனவே குக்கியின் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் இணைந்து பல்வேறு வழியில் ஆறுதலாகவும் அரவணைப்பாகவும் இருக்கிறார்கள். என்றாலும் தனக்கு நிகழ்ந்த பாதிப்பிலிருந்து விடுபடுவது குக்கிக்கு அத்தனை எளிதான விஷயமாக இருப்பதில்லை. 

ஒரு நீண்ட மனப்போராட்டத்திற்குப் பிறகு செல்போனை எடுத்து ஆவேசமான வீடியோ பதிவைப் போடுகிறாள். அதுவரை ஊடகங்களில் மறைக்கப்பட்டிருந்த அவளுடைய அடையாளத்தை வெளிப்படுத்திக் கொள்ளவும் அவள் தயங்குவதில்லை. மோசமான ஆண்கள், பெண்களின் மீது  நிகழ்த்தும் வன்புணர்வு தொடர்பாக ஒரு முக்கியமான விஷயத்தைப் பதிவு செய்வதுதான் அவளுடைய நோக்கமாக இருக்கிறது. இதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஏதாவது ஒரு வகையில் தீர்வோ, பாதையோ அமையாதா என்பதுதான் அவளுடைய ஓலத்தின் ஆணிவேராக இருக்கிறது. 

“அந்த மிருகங்கள் என்னுடைய உடலை சேதப்படுத்தவில்லை. என்னுடைய ஆன்மாவையே கொன்று விட்டார்கள். சம்பவத்திற்கு முன், பின் என்று இரண்டு வேறு வேறு நபராக மாறி விட்டேன். ஒரு பெண்ணுக்கு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தியவர்கள், மிக எளிமையான தண்டனையோடு தப்பித்து விடுகிறார்கள். வன்புணர்வு என்கிற கொடுமையான விஷயத்தை ஏன் நீதித்துறை கொடூரமான குற்றமாக கருதி கையாளக்கூடாது?” என்பதுதான் குக்கியின் ஆவேசமான வாக்குமூலமாக ஒலிக்கிறது. 

ஆண்களின் மனச்சாட்சியை உலுக்கும் திரைப்படம்

பெண்களின் மீது நிகழும் பாலியல் வன்முறை  தொடர்பான வழக்குகளில் குற்றவாளிகள் மிக எளிமையான தண்டனையோடு தப்பித்து விடுகிறார்கள். உண்மையில் இந்த வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்றத்திற்கு வந்து குற்றத்தை நிரூபிப்பதே பெரிய சிரமமான காரியமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் குற்றம் செய்தவர்கள் மிகக் குறைந்த தண்டனையைப் பெற்று சிறை வாழ்க்கையை சொகுசாக கழித்து உடனே வெளியே வந்து விடுவது தண்டனைகளின் மீதான சமூக அச்சத்தையெல்லாம் துடைத்தெறிந்து விடுகிறது. 

இந்தியாவையே உலுக்கிய ‘நிர்பயா’ வழக்கிலும் ‘அரிதினும் அரிதான’ தூக்குத் தண்டனை பிரதான குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டாலும் அந்தக் கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் சிலர், 18 வயதுக்கும் குறைந்தவர்கள் என்பதால் 3 ஆண்டுகள் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கும் தண்டனைதான் வழங்கப்பட்டது. சிறார்களுக்கான அதிகபட்ச தண்டனையே இதுதான். ஆணாதிக்க மனநிலையில் ஓர் ஆண் சில நிமிடங்களில் செய்யும் குற்றமானது, ஒரு பெண்ணுக்கு நிரந்தரமான பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. 

KOOKI
KOOKI

“தனக்கு முன்னால் ஒரு பெண் அழுது கலங்கி மன்றாடும் போது எப்படி அந்த மிருகங்களால் பாதிப்பை ஏற்படுத்த முடிகிறது?” என்று  ஒரு பெண் பத்திரிகையாளர் ஆவேசமாக அரற்றும் ஒரு காட்சி ‘குக்கி’ திரைப்படத்தில் வருகிறது. 

குக்கி என்கிற இளம்பெண்ணாக  Ritisha Khaund  தனது சிறப்பான நடிப்பைத் தந்திருக்கிறார். பதின்பருவ காதலை வெளிப்படுத்தும் தயக்கம், அது நிகழ்ந்த பிறகு ஏற்படும் பரவசம். மழையின் மீதுள்ள நேசம், காதல் உரையாடல்களில் வெளிப்படுத்தும் மென்மையான உணர்வுகள் என்று ஒரு முதிர்ச்சியுள்ள, நாகரிகமான இளம்தலைமுறைப் பெண்ணை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். போலவே பாதிப்புக்கு பிறகு ஏற்படும் மனஉளைச்சல்களை மிகையான தொனியில் அல்லாமல், பரிதாபத்தைக் கோராமல் மிக இயல்பான உடல்மொழியின் வழியாக நடித்துள்ளார்.  இதுதான் இவரது முதல் திரைப்படம் என்பதை நம்பமுடியவில்லை.

குக்கியின் தந்தையாக நடித்துள்ள Rajesh Tailang-ன் பங்களிப்பும் மிக அருமையாக இருக்கிறது. மகளிடம் வெளிப்படுத்தும் இயல்பான பாசம், மகளின் காதலை அறிவதில் காட்டும் முதிர்ச்சி, மகளுடைய நிலைமையைக் கண்டு அடையும் துயரம், அவளை மீட்பதில் காட்டும் பரிவு போன்ற காட்சிகளில் ஒரு பாசமான தந்தையை அப்படியே கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார். தன்னுடைய மகளுடைய காதலனின் மீது முதலில் கோபம் கொண்டு பிறகு அவனுடைய அன்பைப் புரிந்து கொண்டு அரவணைத்து அழைத்துச் செல்லும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன. 

பெரும்பாலும் புதுமுகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் ஏறத்தாழ அத்தனை நடிகர்களும் தங்களின் இயல்பான நடிப்பைத் தந்திருக்கிறார்கள். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனத்தின் உருவாக்கம் என்பதால் அஸ்ஸாமின் அழகான இயற்கைப் பின்னணிக் காட்சிகளில் படம் நகர்கிறது. ஆனால் அவற்றை ரசிக்க முடியாமல் படத்தின் உள்ளடக்கம் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவு, பாடல்கள், இயல்பான வசனம் என்று இதர விஷயங்களிலும் இயல்பான சிறப்பைக் கொண்டிருக்கிற இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் Pranab J Deka. 

‘வன்புணர்வு ஏன் கொடூரமான குற்றமாகக் கருதப்படவில்லை?” என்கிற குக்கியின் கேள்வி நீதிமன்றத்தின் காதில் விழுகிறதோ, இல்லையோ, இந்தப் படத்தைப் பார்க்கும் அனைவருக்கும் - குறிப்பாக ஆணாதிக்கத் திமிர் கொண்ட ஆண்களுக்கு -  குக்கி அடையும் மனஉளைச்சல்கள் ஆழமான சலனத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவிலிருந்து உருவாகியிருக்கும் மிகச் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் ‘குக்கி’யும் நிச்சயம் இணையக்கூடிய தகுதியைக் கொண்டிருக்கிறது. 

Related Stories

No stories found.
logo
News Tremor
newstremor.com