‘கொட்டுக்காளி’ ட்ரெய்லர் விமர்சனம்: கைவிடப்பட்டவளின் போராட்டமும், பின்னால் இருக்கும் கனத்த மெளனமும்!
சூரி, அன்னா பென் நடிப்பில் ‘கூழாங்கல்’ மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது.
தமிழ்நாட்டின் கிராமப்புற வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதன் சிக்கல்கள், போராட்டங்கள் மற்றும் ஒரு பெண்ணின் மெளனத்தையும், அதற்குப் பின்னால் இருக்கும் கனத்தை மெளனத்தையும் வலிமையுடன் கடத்துகிறது ‘கொட்டுக்காளி' ட்ரெய்லர். தென் தமிழகத்தின் சிக்கலான பிரச்சனைகளையும், மக்களின் மூட நம்பிக்கைகளையும், கடவுள் பக்தியையும் இணைத்து கதையமைத்திருக்கிறார் வினோத்ராஜ் என்பது காட்சிகளின் வழியே புலப்படுகிறது.
‘கொட்டுக்காளி’ என்றால் தென் தமிழ்நாட்டில் பிரச்சனையை உண்டாக்கும், தலைவலியைக் கொடுக்கும் நபரைக் குறிப்பதற்கு பயன்படுத்தும் சொல். சத்தமாகப் பேசிக்கொண்டே இருக்கும் ஒரு பெண் திடீரென சத்தம் இல்லாமல் மெளனிப்பது ஏன் என்பதைத்தான் இந்தப்படம் சொல்கிறது.
சூரி தனது வழக்கமான நகைச்சுவை படங்களில் இருந்து விலகி, இந்த படத்தில் ஒரு ஆழமான, உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஹெலன்' படங்கள் மூலம் புகழ்பெற்ற அன்னா பென் இந்தப்படத்தில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் ‘கொட்டுக்காளி’ ஒரு வித்தியாசமான, உணர்ச்சிகரமான மற்றும் துணிச்சலான ஒரு கதையை நமக்குக் கொடுக்கப் போகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆகஸ்ட் 23-ம் தேதி ரிலீஸாகும் ‘கொட்டுக்காளி’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படைப்பாக இருக்கும் என நம்பலாம்!