விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டம்; மயங்கி விழுந்த மகன் சண்முக பாண்டியன்!
மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் 72-வது பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று சென்னையில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்றே 71 தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்தின் உருவத்தை தங்கள் கைகளில் டாட்டூவாகப் போட்டுக் கொண்டனர். மேலும், இன்று கேப்டன் கோயிலுக்கு வருபவர்களுக்கு சிறப்பு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
கமல்ஹாசன், எடப்பாடி பழனிசாமி உட்பட அரசியல்வாதிகளும் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் விஜயகாந்தை நினைவு கூர்ந்து வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். நடிகர் சங்க உறுப்பினர்களும் விஜயகாந்த் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக விஜயகாந்தின் நினைவிடத்தில் முழு உருவச் சிலையை பிரேமலதா திறந்து வைத்துள்ளார்.
விஜயகாந்த் சிலையை கட்டிப் பிடித்து கண்ணீர் மல்க அழுதார் பிரேமலதா. இதுமட்டுமல்லாது, தேமுதிக அலுவலகம் இனிமேல் கேப்டன் கோயில் என்றே அழைக்கப்படும் என்றார். விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் ஏராளமான ரசிகர்களும் கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்ட நெரிசல் காரணமாக விஜயகாந்த் மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.