விஜய் இனி ரசிகர்களைத் தேடி வருவார்; லெஜெண்ட் சரவணா பேட்டி!
‘லெஜெண்ட்’ படத்தை அடுத்து ’கருடன்’ பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா, ஷாம் மற்றும் கதாநாயகியாக பாயில் ராஜ் நடிக்கிறார்கள். சென்னையில் நடந்து முடிந்துள்ள முதல் கட்டப் படப்பிடிப்பை அடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதனைத்தொடர்ந்து வட மாநிலங்கள் வயநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று 'லெஜெண்ட்' சரவணா பேட்டி அளித்தார். திரைத்துறையில் பாலியல் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, “குற்றம் உறுதி செய்யப்பட்டால் தண்டனை நிச்சயம் வழங்கபட வேண்டும். கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தக்க தீர்ப்பு வழங்கும். தொழில்துறை, சினிமா மற்றும் அரசியல் மூன்றும் மிக பிடித்தமானது. மூன்றிலும் இணைந்து பயணிப்போம்” என்றார்.
விஜய்யின் அரசியல் பயணம் குறித்து கேட்டபோது, “விஜய் அரசியலை பொறுத்தவரையில் மும்முனை போட்டி இருக்கும். சரியான கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக அவரால் வெற்றி பெற முடியும். தனித்து யாரும் வெற்றி பெற முடியாது. அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. அதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ரசிகர்கள் விஜய்யை தேடி சென்று கொண்டிருந்தார்கள். இனி ரசிகர்களை தேடி விஜய் வருவார்” என்றார்.