விஜய் பிறந்தநாள்… கடைசியாக வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்… காரணம் என்ன?
நடிகர் விஜய்யின் 50-வது பிறந்தநாள் இன்று. விஜய்க்கு எப்போதும் வாழ்த்துசொல்லாத அரசியல்தலைவர்கள்கூட அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவருகிறார்கள். இன்று காலையிலேயே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எனப்பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துவிட்டனர்.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு GOAT படத்தின் 50 செகண்ட் வீடியோ ஒன்று நள்ளிரவில் வெளியிடப்பட்ட, மாலையில் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படுகிறது. தளபதியின் பிறந்தநாள் என்று அவரது ரசிகர்கள் கொண்டாடிக்கொண்டிருக்க ஒருவர் மட்டும் இன்னும் விஜய்க்கு வாழ்த்துச் சொல்லவில்லை என சமூகவலைத்தளங்களில் அவர்களது ரசிகர்கள் பொங்கிவிட்டனர். வாழ்த்துச்சொல்லாத அவர் லோகேஷ் கனகராஜ்.
விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘லியோ’, அதற்கு முன்பாக 'மாஸ்டர்' என இரண்டு படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர் ‘கைதி' படத்தை முடித்தவுடன் விஜய்யின் ‘மாஸ்டர்' படத்தை இயக்கினார். இந்தப்படம் தந்த வெற்றியின் உற்சாகத்தில் மீண்டும் இருவரும் இணைந்து ‘லியோ’ படத்தை உருவாக்கினர். ஆனால், லியோ படத்தின் படப்பிடிப்பு பாதியில் இருக்கும்போதே விஜய்க்கும், லோகேஷ் கனகராஜுக்கும் கருத்துமோதல்கள் உருவானது.
லோகேஷ் சொன்ன திரைக்கதையில் விஜய் சில விமர்சனங்களை முன்வைக்க, அதற்கு லோகேஷ் மறுப்புத் தெரிவித்தார். இதனால் 'லியோ' படத்தில் லோகேஷ் அதுவரை எடுத்தவற்றை எடிட் செய்து விஜய் காட்டச்சொல்ல, அதைப்பார்த்த விஜய் படத்தின் அவுட்புட்டில் தனக்கு திருப்தி இல்லை என்றுசொல்லிவிட்டார். இதனால் படம் பாதியில் இருக்கும்போதே லோகேஷ் கனகராஜ் படத்தில் இருந்து விலகிக்கொள்வதாகச் சொல்ல, பின்னர் சமாதானம் பேசப்பட்டு படத்தை முடித்து வெளியிடும் வேலைகள் நடந்தன.
லோகேஷ் ‘லியோ’ படத்தின் ப்ரமோஷன் பேட்டிகளில் எங்கேயுமே விஜய்யைப் பற்றிபேசவேயில்லை. இந்த நிலையில்தான் விஜய்யின் 50-வது பிறந்தநாளுக்கும் வாழ்த்துச் சொல்லாமல் தவிர்த்திருக்கிறார் என செய்திகள் வெளியாக மாலை 5 மணிக்கு மேல் வாழ்த்துச்செய்தியை ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
லோகேஷின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு இதேநாள் விஜய்யின் பிறந்தநாளுக்கு லியோ போஸ்டரை வெளியிட்டு வாழ்த்துச்சொன்ன போஸ்ட் மட்டும் பின் செய்யப்பட்டு முதலில் வைக்கப்பட்டிருந்தது. நேரம் ஆக, ஆக ரசிகர்களிடம் இருந்தும், செய்தியாளர்களிடம் இருந்து ட்வீட்கள் பறக்க, இறுதியாக மாலையில் வாழ்த்துச்சொல்லி பிரச்சனையை முடித்துவைத்திருக்கிறார் லோகேஷ்.