விஜய்சேதுபதியை வெற்றிபெறவைத்ததா ‘மகாராஜா’?! Maharaja விமர்சனம்
நீண்ட இடைவெளிக்குப்பிறகு விஜய்சேதுபதிக்கும், தமிழ் சினிமாவுக்கும் ‘மகாராஜா’ மூலம் ஒரு ஹிட் கொடுத்து நம்பிக்கைத் தந்திருக்கிறார் இயக்குநர் நித்திலன். ‘குரங்கு பொம்மை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதனின் இரண்டாவது படம்தான் ‘மகாராஜா’.
பணவெறி ஒரு மனிதனை, ஒரு தந்தையை என்ன செய்யும் என்பதை கனமான காட்சிகள் மூலம் அழுத்தமாகப் பதியவைத்திருக்கிறார் இயக்குநர். நான் லீனியர் பாணியில் சொல்லப்பட்டிருக்கும் கதை, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற பரபரப்பைக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறது.
தேனப்பனின் சலூன் கடையில், ஒரு கைக்குழந்தைக்குத் தந்தையாக விஜய்சேதுபதி வேலை செய்யும்போது நடக்கும் சம்பவத்துக்கும், பாரதிராஜாவை தன் வேலையாளாக வைத்துகொண்டு, டீன்ஏஜ் மகளுக்குத் தந்தையாக, சொந்தமாக விஜய்சேதுபதி சலூன் கடை நடத்தும்போது நடக்கும் சம்பவத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அந்தத் தொடர்பை குப்பைத்தொட்டி எனும் லட்சுமியைக் குறியீடாகக் கொண்டு கதைசொல்லி அசத்தியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக க்ளைமேக்ஸும், கால்தடத்தில் விழும் ரத்தக்கறையும் சொல்லும் செய்திகள் ஏராளம்.
மகள் ஜோதியும், சலூன் கடையுமே வாழ்க்கை என வாழும் விஜய்சேதுபதி தன் வீட்டில் லட்சுமி எனும் குப்பைத்தொட்டியை சாமியாக வணங்குகிறார். அந்தக் குப்பைத்தொட்டியை களவாடுகிறது ஒரு கேடுகெட்ட கும்பல். லட்சுமியைக் களவாடிய கயவர்களை என்ன செய்கிறார் மகாராஜா என்பதுதான் படத்தின் கதை.
பாசமும், போராட்டகுணமும் மிக்க தந்தையாக நடித்து மிரட்டியிருக்கிறார் விஜய்சேதுபதி. அவரது ஸ்கிரீன் ப்ரசன்ஸும், உடல்மொழியும், பேசும்விதமும் ‘மகாராஜா’ கதாபாத்திரத்துக்கு இவர்தான் சரியான தேர்வு என சொல்லவைக்கிறது. இன்ஸ்பெக்டர் வரதனாக நடித்திருக்கும் நட்டி என்கிற நடராஜ், மகள் ஜோதியாக நடித்திருக்கும் சச்சினா நெமிதாஸ், சப் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருள்தாஸ், வில்லன்களாக நடித்திருக்கும் அனுராக் காஷ்யப், ‘பாய்ஸ்’ மணிகண்டன், சிங்கம்புலி, அம்முவின் அம்மாவாக நடித்திருக்கும் அபிராமி, பிடி டீச்சராக நடித்திருக்கும் மம்தா மோகன்தாஸ், கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் முனீஸ்காந்த் என ஒவ்வொருவரின் நடிப்பும், கதாபாத்திரத்தேர்வும் நச்சென இருக்கிறது.
நான்லீனியர் கதையை எடிட் செய்வது மிகவும் சிரமம். கொஞ்சம் கவனிக்கத்தவறினாலும் கதை புரியாமல்போகும் வாய்ப்பு அதிகம். அப்படியானால் பார்வையாளனின் கவனம் சிதையாத வகையில் படத்தொகுப்பு இருக்கவேண்டும். அப்படிப்பட்ட படத்தொகுப்பின்மூலம் அப்ளாஸ் அள்ளுகிறார் எடிட்டர் பிலோமின் ராஜ். ஒவ்வொரு காட்சியிலும் தன் கேமரா கண்கள் மூலம் டென்ஷனைக் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ்குமார். உணர்வுப்பூர்வமான பின்னணி இசை மூலம் பார்வையாளனை படத்தோடு ஒன்றிப்போகச்செய்திருக்கிறார் இசையமைப்பாளர் அஜனீஷ். அனல் அரசுவின் சண்டைகாட்சிகளில் அனல் தெறிக்கிறது.
விஜய் சேதுபதி திரும்பத் திரும்ப போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்கும் காட்சிகளும், ப்ரீ க்ளைமேக்ஸ் காட்சிகளும் விறுவிறுப்பானக் கதைக்களத்துக்கு இடையே உறுத்தலாக இருக்கின்றன. வசனங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மிகவும் கனமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதில் காமெடியையும் கலந்து அழுத்தமான க்ளைமேக்ஸுடன் கதை சொல்லி எண்ட் கார்டு போடும்போது கைதட்ட வைக்கிறது ‘மகாராஜா’!